2-வது நாளாக வேலைநிறுத்த போராட்டம்: தூத்துக்குடியில் டேங்கர் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைப்பு
- தூத்துக்குடியில் 47 லாரிகள் ஓடவில்லை.
- டேங்கர் லாரிகள் நிறுத்தப்பட்டு இருப்பதால் எரிவாயு வினியோகத்தில் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
தூத்துக்குடி:
பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் தங்களிடம் ஒப்பந்தம் செய்து உள்ள எல்.பி.ஜி. டேங்கர் லாரிகளுக்கு புதிய ஒப்பந்தப்படி சில திருத்தங்களை கொண்டு வருகின்றன. அதே போன்று வாடகையையும் குறைத்து உள்ளன.
இது போன்ற கட்டுப்பாடுகளை தளர்த்தக்கோரி தென்மாநிலங்களில் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று 2-வது நாளாக போராட்டம் தொடர்ந்தது.
இதனை தொடர்ந்து எல்.பி.ஜி டேங்கர் லாரிகள் துறைமுகத்தில் இருந்து எரிவாயுவை நிரப்ப செல்லாமல் தூத்துக்குடியில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம், கொச்சி துறைமுகத்தில் இருந்து எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் மூலம் தினமும் சுமார் 200 டன் எரிவாயு தூத்துக்குடி-மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள பாரத் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு கொண்டு வரப்படும்.
அங்கிருந்து சிலிண்டர்களில் நிரப்பப்பட்டு தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படும். இதனால் தூத்துக்குடியில் 47 லாரிகள் ஓடவில்லை. தற்போது டேங்கர் லாரிகள் நிறுத்தப்பட்டு இருப்பதால் எரிவாயு வினியோகத்தில் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.