தமிழ்நாடு

இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் தமிழ்நாடு முதலிடம்- இ.பி.எஸ். குற்றச்சாட்டு

Published On 2025-01-11 16:03 IST   |   Update On 2025-01-11 16:03:00 IST
  • தேர்தலின் போது திமுக அறிவித்த 20% அறிவிப்புகளே நிறைவேற்றப்பட்டுள்ளன.
  • ஓட்டை உடைசல் பேருந்துகளை மக்கள் ஸ்டாலின் பேருந்து என்று தான் கூறுகின்றனர்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தலைமைக் கழகத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு, மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இதில் பங்கேற்க வந்த எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

நீட் தேர்வு விவகாரத்தில் முதலமைச்சர் கையை விரித்து விட்டார். மத்திய அரசு தான் நீட் தேர்வை ரத்து செய்யமுடியும் என்று முதலமைச்சர் தற்போது கூறுகிறார். நீட் தேர்வு ரத்து என்று கூறி மாணவர்கள், பெற்றோர்களை திமுக அரசு ஏமாற்றி விட்டது.

தேர்தலின் போது திமுக அறிவித்த 20% அறிவிப்புகளே நிறைவேற்றப்பட்டுள்ளன. 565 அறிவிப்புகளில் நீட் ரத்து உள்ளிட்ட முக்கியமான அறிவிப்புகள் நிறைவேற்றப்படவில்லை

பொருட்களின் விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து விட்டது. திமுக ஆட்சியில், அரிசி, பருப்பு மற்றும் பூண்டு உள்ளிட்ட பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன.

அரசு பேருந்துகளை மக்கள் ஸ்டாலின் பேருந்து என்று கூறுவதாக முதலமைச்சர் கூறுகிறார். ஆம் ஓட்டை உடைசல் பேருந்துகளை மக்கள் ஸ்டாலின் பேருந்து என்று தான் கூறுகின்றனர். அனைத்து நகர பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று முதலில் முதலமைச்சர் கூறினார். ஆனால் பின்னர் பேருந்துகளின் முன்னாலும் பின்னாலும் லிப்ஸ்டிக் அடித்து அந்த பேருந்துகளில் மட்டும் தான் பெண்கள் இலவசமாக பயணிக்க முடியும் என்று முதலமைச்சர் அறிவித்தார்.

வெளியில் பல்வேறு கடன்வாங்கி மகளிருக்கு 1000 ரூபாய் கொடுக்கிறார்கள். அரசின் வருவாயை பெருக்கி நலத்திட்டங்களை உருவாக்கினால் தான் அது நல்ல அரசு. ஒருபுறம் வருவாய் அதிகரிக்கிறது, இன்னொரு புறம் கடனும் அதிகரித்து வருகிறது.

கடன் வாங்குவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதலிடத்தில் உள்ளது. இப்படியே கடன் வாங்கி கொண்ட போனால் எப்போது கடனை அடைப்பது" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags:    

Similar News