தமிழ்நாடு
படத்துக்கு பல மொழி வேண்டும், பாடத்திற்கு கூடாதா? விஜய் தி.மு.க. எதிர்ப்பை தீவிரப்படுத்த வேண்டும்- தமிழிசை

படத்துக்கு பல மொழி வேண்டும், பாடத்திற்கு கூடாதா? விஜய் தி.மு.க. எதிர்ப்பை தீவிரப்படுத்த வேண்டும்- தமிழிசை

Published On 2025-03-30 14:21 IST   |   Update On 2025-03-30 14:21:00 IST
  • விஜய்யின் பேச்சில் தெளிவற்ற தன்மைதான் உள்ளது.
  • செங்கோட்டையன் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தது ஏன் என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது.

சென்னை:

தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தி.மு.க.வுக்கும், த.வெ.க.வுக்கும்தான் போட்டி என்று பேசுகிறார். எதுகை மோனையில் வேண்டுமானால் அது சரியாக இருக்கலாம். ஆனால் நீங்கள் எதிரில் இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கட்சியில் அடிப்படையிலேயே மிக தீவிரமாக மக்கள் பணியாற்றி முன்னுக்கு வந்தனர்.

விஜய் முதலில் தி.மு.க.வுக்கான எதிர்ப்பை தீவிரப்படுத்த வேண்டும். அந்த காலத்து நடிகர்களின் படங்கள் தமிழ்நாட்டுக்குள்ளேயே இருந்தது. ஆனால் இன்று விஜய் படம் தெலுங்கானாவில் ஓஹோவென்று ஓடுகிறது. உங்களுக்கு பல மொழிகள் தேவைப்படும் போது குழந்தைகளுக்கும் இணைப்பு மொழி தேவைப்படுகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் படத்திற்கு பல மொழிகள் வேண்டும். பாடத்திற்கு பல மொழிகள் வேண்டாம் என்று சொன்னால் எப்படி? விஜய்யின் பேச்சில் தெளிவற்ற தன்மைதான் உள்ளது.

எங்களை தி.மு.க.வின் பி அணி என்று விஜய் சொல்கிறார். தி.மு.க. சொல்வதைத்தான் நீங்களும் சொல்கிறீர்கள். நீங்கள்தான் தி.மு.க.வின் பி அணி.

பரந்தூர் விமான நிலையம் வேண்டாம் என்று விஜய் சொல்கிறார். உங்களுக்கு பனையூர் வேண்டும். நீங்கள் சாலிகிராமத்தில் எனது வீட்டு அருகில் தான் சிறிய வீட்டில் இருந்தீர்கள். உங்கள் வாழ்க்கை விரிவடைய விரிவடைய உங்களுக்கு பனையூர் தேவைப்படுகிறது. அப்படியென்றால் தமிழக மக்களின் வாழ்க்கை விரிவடைய விரிவடைய பரந்தூர் தேவைப்படுகிறது. தமிழக அரசு கொடுக்கும் இடத்தில்தான் மத்திய அரசு விமான நிலையம் அமைக்கும்.

பிரதமர் மோடியை எதிர்த்து பேசும் தைரியும் இருப்பதாக கூறும் விஜய் தனது தயாரிப்பாளரை எதிர்த்து பேசி இருப்பாரா? உங்களுடைய டைரக்டரை எதிர்த்து பேசி இருப்பீர்களா?

விஜய் இன்னும் கொஞ்சம் அழுத்தமாகவும், ஆழமாகவும் அரசியலை கற்றுக் கொண்டு பேச வேண்டும். செங்கோட்டையன் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தது ஏன் என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News