திருப்பூரில் சூடுபிடிக்கும் பருத்தி நூலிழை டி-சர்ட்டுகள் விற்பனை
- பருத்தி நூலிழையில் தயாரிக்கப்படும் உள்ளாடைகளுக்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது.
- நாடு முழுவதும் கோடைகால ஆடைகள் விற்பனை தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
திருப்பூர்:
திருப்பூரில் உற்பத்தியாகும் பின்னலாடைகள் மற்றும் உள்ளாடைகள் அதிக வரவேற்பை பெற்றுள்ளன. பருத்தி நூலிழையில் தயாரிக்கப்படும் உள்ளாடைகளுக்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு தீபாவளி பண்டிகை ஆர்டர் பரபரப்பாக மாறியிருந்தது. வழக்கம் போல் தீபாவளிக்கு பின் பனியன் ஆர்டர்கள் மந்தமாகியது.
அதன்பின் தைப்பொங்கல் பண்டிகையில் இருந்து மாதாந்திர விற்பனைக்கான ஆர்டர்கள் வர தொடங்கின. நவம்பர் -டிசம்பர் மாதங்களுக்கு பிறகு ஜனவரி மாத இறுதியில் இருந்து தான், பின்னலாடை நிறுவனங்களின் இயக்கம் சீராகியுள்ளது.
திருப்பூரில் தயாரிக்கப்படும் பருத்தி நூலிழை டி-சர்ட்டுகள், கோடைகாலத்துக்கு ஏற்றவை. அத்துடன், பெண்களுக்கான இரவு நேர ஆடைகளும் அதிக வரவேற்பு பெற்றுள்ளன. அதன்படி நாடு முழுவதும் கோடைகால ஆடைகள் விற்பனை தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
இதனால் நீண்ட இடைவெளிக்கு பின் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களுக்கு ஆர்டர் விசாரணை சாதகமாக மாறியுள்ளது. வடமாநிலங்களில் போட்டியாக உற்பத்தி நிலையங்கள் துவங்கினாலும் கோடை கால பயன்பாட்டுக்கான பருத்தி பின்னலாடைகள் திருப்பூரில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. இதன்காரணமாக நாடு முழுவதும் இருந்து ஆர்டர் வர தொடங்கி உள்ளது.
இது குறித்து பின்னலாடை உற்பத்தியாளர்கள் கூறியதாவது:-
தீபாவளிக்கு பின் பொங்கல் பண்டிகை வரை திருப்பூர் ஆடை விற்பனை மிக மந்தமாக இருந்தது. அதன்பின் அன்றாட விற்பனைக்கான ஆர்டர்கள் வர தொடங்கியது. கோடை தொடங்கி விட்டதால் வடமாநிலங்களில் இருந்து தற்போது தான் ஆர்டர் வந்துள்ளது. ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள உள்ளாடைகள் மற்றும் பின்னலாடைகளை, அனுப்பி வைக்கும் பணி வேகமெடுத்துள்ளது.
கோடை வெப்பத்தை சமாளிக்கும் வகையில் பின்னல் ஆடைகள் அணிவதையே மக்கள் விரும்புகின்றனர். அதற்காக பின்னல் ஆடைகள் மற்றும் உள்ளாடைகள் விற்பனை வேகமெடுத்து வருகிறது. ஜூன் மாதம் பள்ளி சீருடை ஆர்டர் துவங்கும் வரை கோடைகால ஆர்டர்கள் கை கொடுக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ரம்ஜான் பண்டிகைக்காக ஒவ்வொரு மாநிலங்களில் இருந்தும் வழக்கமான வர்த்தகர்கள் வந்து கொள்முதல் செய்து சென்றுள்ளனர். தெலுங்கானா, ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் கொண்டாடப்படும் யுகாதி பண்டிகைக்காக, அம்மாநில வியாபாரிகளும் மொத்த கொள்முதல் செய்து சென்றனர். கோடை காலம் தொடங்கிவிட்டதால் திருப்பூரில் தயாரிக்கப்படும் 'பைன்' 'டி-சர்ட்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது என ஆடை உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.