சாக்லேட் வடிவில் புதிய போதைப் பொருள் விற்பனை.... மாணவர்கள் உஷார்
- "ஸ்ட்ராபெர்ரி குயிக்" எனப்படும் புதிய போதைப்பொருள்.
- மாணவர்கள் சாப்பிட்டு விட்டால் அதில் இருந்து மீள முடியாது.
தமிழகத்தில் பள்ளிக் கூடங்கள் இருக்கும் பகுதிகளில் சாக்லேட் வடிவில் புதுவகை போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

"ஸ்ட்ராபெர்ரி குயிக்" எனப்படும் ஒரு புதிய போதைப்பொருள். பள்ளி கூடங்களின் அருகில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக எச்சரிக்கை தகவல் கொடுக்கப்பட்டு அது வேகமாக பரவி வருகிறது.
வாயில் போட்டால் வெடித்து சிதறுவது போன்ற உணர்வை ஏற்படுத்தும் இந்த போதைப் பொருளில் மெத்த பெட்டமின் போதைப் பொருள் கலந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஸ்ட்ராபெரி வாசனையுடன் கூடிய இந்த வகை சாக்லேட் போதைப் பொருள் மாணவப் பருவத்தில் இருந்தே மாணவர்களை போதைப் பொருட்களுக்கு அடிமையாக்கி விடும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் தமிழகம் முழுவதும் போலீசார் பள்ளிக்கூடங்களில் அருகில் உஷார் படுத்தப்பட்டு கண்காணித்து வருகிறார்கள்.
இந்த போதைப் பொருளை மிட்டாய் என்று நினைத்து மாணவர்கள் சாப்பிட்டு விட்டால் அதில் இருந்து அவர்கள் மீள முடியாது என்கிற எச்சரிக்கை தகவலும் வெளியாகி உள்ளது.
இது சாக்லேட், வேர்க்கடலை வெண்ணெய், கோலா, திராட்சை மற்றும் ஆரஞ்சு சுவைகளிலும் இந்த போதைப் பொருட்கள் கிடைப்பதாக கூறப்படுகிறது. எனவே பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்பும் பெற்றோர்கள் பள்ளிக்கூடங்களில் அருகில் அறிமுகமில்லாத நபர்கள் எந்தவித சாக்லேட்டுகளை கொடுத்தாலும் வாங்கி சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்தி அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறது.
எனவே உஷாராக செயல்பட்டு போதைப் பழக்கத்தில் இருந்து மாணவர்களை காக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் விருப்பமாக உள்ளது.