சீரழிந்து கிடக்கும் சுரங்கப்பாதைகளால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் பரிதாபம்
- சுரங்கப்பாதை மீண்டும் குண்டும் குழியுமாக மாறி விட்டது.
- நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதையிலும் நீர்க்கசிவு ஏற்பட்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
சென்னையில் உள்ள சுரங்கப்பாதைகள் சில ஆண்டுகளாகவே சீரழிந்து வருகிறது. சுரங்கப்பாதைகளில் ஏற்படும் நீர்கசிவு என்பது வாகன ஓட்டிகளுக்கு பெரும் தலைவலியாக உள்ளது. இந்த நீர்க்கசிவு காரணமாக சுரங்கப்பாதையில் உள்ள சாலைகளில் அரிப்பு ஏற்பட்டு பள்ளங்கள் உருவாகி சுரங்கப்பாதை சாலை, குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
குறிப்பாக சென்னை தி.நகர் துரைசாமி சுரங்கப்பாதை, நுங்கம்பாக்கம் லயோலா சுரங்கப்பாதை, எழும்பூர் கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை ஆகியவை மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றன.
தி.நகர் துரைசாமி சுரங்கப்பாதையில் நீர்க்கசிவு ஏற்பட்டு குண்டும் குழியுமாக காணப்பட்டதால், சில மாதங்களுக்கு முன்பு புதிதாக சாலை அமைக்கப்பட்டது. ஆனால் நீர் கசிவு தடுக்கப்படாததால் தொடர்ந்து கசிவு நீர் பெருக்கெடுத்து ஓடி, சாலை முழுவதையும் அரித்துவிட்டது. இதனால் சுரங்கப்பாதை மீண்டும் குண்டும் குழியுமாக மாறி விட்டது.
நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதையிலும் நீர்க்கசிவு ஏற்பட்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சுரங்கப்பாதை சாலையில் அரிப்பு ஏற்பட்டு சாலை மேடு பள்ளமாக காணப்படுகிறது.
இந்த 2 சுரங்கப்பாதைகளிலுமே நீர்கசிவு மற்றும் மேடு பள்ளம் காரணமாக அடிக்கடி வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து விபத்தை சந்தித்து வருகிறார்கள்.
இதேபோல் எழும்பூர் கெங்கு ரெட்டி சுரங்கப்பாதையின் சாலையும் மிக மோசமான நிலையில் உள்ளது. இங்கும் அவ்வப்போது நீர்க்கசிவால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் சாலையும் மிக மோசமான நிலையில் உள்ளது.
இந்த சுரங்கப்பாதைகள் சீரழிந்து கிடப்பதால் இந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்வதற்கும் தாமதம் ஆகிறது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த காலை மற்றும் மாலை நேரங்களில் தி.நகர் சுரங்கப்பாதையை கடக்க சுமார் 6 முதல் 10 நிமிடங்கள் ஆகிறது. நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதையை கடக்க சுமார் 8 முதல் 10 நிமிடங்கள் ஆகிறது. எழும்பூர் கெங்கு ரெட்டி சுரங்கப்பாதையை கடக்க 5 முதல் 8 நிமிடங்கள் ஆகிறது. சாலை குண்டும் குழியுமாக இருப்பதாலேயே இவ்வளவு நேரம் ஆவதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.
இந்த சுரங்கப்பாதை இருக்கும் பகுதிகளில் நிறைய பள்ளிக்கூடங்கள் உள்ளன. இதனால் இந்த சுரங்கப்பாதைகள் வழியாக மாணவர்களை பள்ளிகளுக்கு கொண்டு விடும் பெற்றோர்கள் கடும் சிரமத்தை சந்திக்கிறார்கள்.
துரைசாமி சுரங்கப்பாதை மேற்கு மாம்பலத்தையும், தி.நகரையும் இணைக்கும் முக்கியமான சுரங்கப்பாதை ஆகும். இங்கு போக்குவரத்து நெரிசல் இல்லாத நேரங்களில் கூட அதிக அளவில் வாகனங்கள் செல்கின்றன. சுரங்கப்பாதையில் பெருக்கெடுத்து ஓடும் கசிவு நீராலும், சாலை மேடு பள்ளமாக இருப்பதாலும் எப்போதுமே போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதையில் நீர்க்கசிவு ஏற்பட்டு, சாலையில் அரிப்பு ஏற்பட்டு மணல் திட்டுக்களும் காணப்படுகின்றன. இந்த மணல் திட்டுக்களில் சிக்கும் இருசக்கர வாகனங்கள் வழுக்கி விழுந்து விபத்தை சந்திக்கின்றன.
சென்னையில் உள்ள 16 சுரங்கப்பாதைகள் கிட்டத்தட்ட மோசமான நிலையிலேயே காணப்படுகின்றன. ஆதம்பாக்கம் தில்லை கங்காநகர் சுரங்கப்பாதை எப்போதுமே நீர்கசிவுடனும், வழுக்கும் தன்மையுடனும் காணப்படுகிறது. இந்த சுரங்கப்பாதை நீர்நிலையில் கட்டப்பட்டுள்ளதால் நீர்க்கசிவு என்பது எப்போதும் ஏற்படுகிறது.
மேலும் சுரங்கபாதைகளின் பக்கவாட்டு பகுதிகளில் பொதுமக்கள் நடந்து செல்லும் பாதையும் குப்பைகளாக காணப்படுகிறது. அதில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் முகம் சுழித்தபடியே சுரங்கப்பாதையை கடந்து செல்கிறார்கள். பல சுரங்கப்பாதைகளில் விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் குண்டும் குழியுமான சாலையில் சிக்கி விபத்துகள் ஏற்படுகிறது.
பல சுரங்கப்பாதைகள் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி விடுகின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இந்த சுரங்கப்பாதைகள் ஆண்டுக்கணக்கில் சீரழிந்து கிடக்கும் நிலையில், அதை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வாகன ஓட்டிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.
எனவே இந்த சுரங்கப்பாதைகளில் நீர்க்கசிவுகள் தடுக்கப்பட்டு சாலைகளில் உள்ள மேடு பள்ளங்கள் எப்போது சீரமைக்கப்படும் என்பது பொதுமக்களின் கேள்வியாக உள்ளது. இந்த சுரங்கப்பாதைகளை சென்னை மாநகராட்சி விரைவில் சீரமைத்து பாதுகாப்பான வாகன பயணத்தை உறுதி செய்ய வேண்டும் என்பது வாகன ஓட்டிகள் அனைவரின் கோரிக்கையாகும்.