பரந்தூர் விமான நிலையம் போராட்ட குழுவினரை விஜய் சந்திப்பது தனிப்பட்ட உரிமை- வைகோ
- இந்தியாவில் மோடி ஆட்சியில் சர்வாதிகாரம் மட்டுமே ஓங்கி வருகிறது.
- திராவிட மாடல் ஆட்சி மக்களுக்கான ஆட்சியாக விளங்கி வருகிறது.
திண்டுக்கல்:
தேர்தல் வழக்கு தொடர்பாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று திண்டுக்கல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின்போது மக்கள் நலக்கூட்டணி சார்பில், திண்டுக்கல்லில் பிப்ரவரி 22-ம் தேதி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது தேர்தல் விதிமுறைகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டதாக திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மாவட்ட செயலாளர் செல்வராகவன், நகர செயலாளர் செல்வேந்திரன் மற்றும் கூட்டணிக்கட்சியினர் 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் ஜே.எம்.1ல் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி வைகோ தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, இந்த வழக்கை 4 மாதங்களுக்குள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் விசாரித்து முடிக்க உத்தரவிட்டார். இதையடுத்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
திண்டுக்கல் ஜே.எம்., 1 நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் சவுமியா மேத்யூ முன்னிலையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, திண்டுக்கல் மாவட்டச்செயலாளர் செல்வராகவன், நகர செயலாளர் செல்வேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் மைதீன்பாவா, மாநில துணை செயலாளர் திருச்சித்தன் உள்ளிட்ட 12 பேர் நேரில் ஆஜராகினர். வழக்கு விசாரணையை பிப்.5ம் தேதிக்கு மீண்டும் ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
அதன் பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் வைகோ கூறியதாவது,
இந்தியாவில் மோடி ஆட்சியில் சர்வாதிகாரம் மட்டுமே ஓங்கி வருகிறது. அரசியல் அமைப்பு சட்டத்தை அவர்கள் மதிப்பதே இல்லை. ஒரேநாடு, ஒரேதேர்தல், ஒரேகொடி என மாற்ற முயற்சி எடுத்து வருகின்றனர். வாரணாசியில் நடந்த ஆர்.எஸ்.எஸ். பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நாடு முழுவதும் நிறைவேற்ற மோடி அரசு முனைப்பு காட்டி வருகிறது. அம்பேத்கரின் அரசியல் அமைப்பு சட்டத்தையே மாற்றி அமைக்க நினைப்பது கண்டிக்கத்தக்கதாகும்.
மத்திய அரசு பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில் நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுகிறது. அந்த வகையில் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நிதி தொடர்ந்து மறுக்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. ஆனால் இதனையும் கடந்து திராவிட மாடல் ஆட்சி மக்களுக்கான ஆட்சியாக விளங்கி வருகிறது. வருகிற தேர்தலிலும் இந்த கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும், அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜயும் அவர்களை சந்தித்து பேசுகிறார். இது அவரின் தனிப்பட்ட உரிமை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து திண்டுக்கல் சீலப்பாடி, தோமையார்புரம் ஆகிய பகுதிகளில் ம.தி.மு.க. கட்சி கொடியை வைகோ ஏற்றி வைத்தார்.