தமிழ்நாடு

மத்திய அமைச்சர் அமித்ஷா உருவ பொம்மையை எரித்து விசிகவினர் போராட்டம்

Published On 2024-12-19 07:23 GMT   |   Update On 2024-12-19 07:27 GMT
  • தமிழகம் முழுவதும் மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்கு எதிர்ப்புகள் வலுத்து வருகிறது.
  • அமித்ஷாவை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

அம்பேத்கரை அவமதித்ததை கண்டித்து மத்திய அமைச்சர் அமித் ஷாவிற்கு எதிராக இந்தியா கூட்டணி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல், தமிழகம் முழுவதும் மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்கு எதிர்ப்புகள் வலுத்து வருகிறது.

அம்பேத்கரை அவமதித்ததை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமித்ஷாவை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

இதில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற்றுள்ளார். ராமநாதபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும் திமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்போரூர் உள்ளிட்ட இடங்களில் விசிகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தின் ஒரு பகுதியாக, அமித்ஷாவின் உருவ பொம்மையை எரித்து தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

இதேபோல், திண்டுக்கல் ரெயில் நிலையம் வழியே மாநகர மாவட்ட செயலாளர் மைதீன்பாவா தலைமையில் திரண்ட அக்கட்சியினர் ஏற்கனவே தாங்கள் மறைத்து கொண்டு வந்திருந்த அமித்ஷாவின் உருவ பொம்மையை தீவைத்து எரித்தனர். அப்போது அவரை உடனடியாக மத்திய மந்திரி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கோசமிட்டனர்.

இதனையடுத்து போலீசார் உருவ பொம்மையை பறித்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 30 வி.சி.க.வினரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Tags:    

Similar News