தமிழ்நாடு

நாளை சென்னையில் நடைபெறும் மகளிர் தின கொண்டாட்டங்கள்- முழு விவரம்

Published On 2025-03-07 10:59 IST   |   Update On 2025-03-07 10:59:00 IST
  • 9 முதல் 14 வயது சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு தடுப்பூசி போடப்படுகிறது.
  • பல்வேறு துறைகளை சேர்ந்த பெண்களுக்கு விருது வழங்கப்படுகிறது.

சர்வதேச மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ந்தேதி கொண்டாடப் படுகிறது. அதன்படி இந்த ஆண்டு மகளிர் தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு சென்னையில் பல்வேறு சங்கங்கள் மற்றும் அமைப்புகள் சார்பில் கலை-கலாச்சார நிகழ்ச்சிகள், மருத்துவ முகாம், கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகிறது.

இந்த ஆண்டு பெண்களை மகிழ்விக்கும் வகையில் பல நிகழ்ச்சிகள் நடைபெறும் அதே வேளையில், ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலும் பல்வேறு நிகழ்வுகள் நடக்கின்றன.

ஆவடி ஓ.சி.எப். வளாகம் வி.வி.கே. மேனன் மாநாட்டு மையத்தில் எப்.டி.டி.எம்.ஏ. மற்றும் மகளிர் நலச்சங்கம் இணைந்து பெண்களுக்கான இலவச மருத்துவ முகாம் நாளை காலை 9.30 மணி முதல் நடத்தப்படுகிறது.

போரூர் ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி, வானகரம் அப்பல்லோ ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனையின் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று பெண்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்குகின்றனர்.

இந்த முகாமில் பொது மருத்துவ பரிசோதனை, கர்ப்பப்பை வாய், மார்பக புற்றுநோய் பரிசோதனை, மோமோகிராம் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

எப்.இ.ஐ.எம்.ஏ. சார்பில் கே.டி.டி.சி. ரெயின்ட்ராப்ஸ் ஓட்டலில் நடைபெறும் நிகழ்ச்சியை அதன் தேசிய தலைவர் புருஷோத்தமன் தொடங்கிவைக்கிறார். இதில் திரைப்பட மற்றும் நாடக நடிகை ஷைலா தாஸ் கவுரவிக்கப்படுகிறார்.

சென்னை கேரள சமாஜத்தில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் மகளிர் தின விழாவில் நடிகை வாணி விஸ்வநாத் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார். இதில் கேரள சமாஜத்தின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் சிறந்த விளங்கும் 12 பெண்களுக்கு விருது வழங்கப்படுகிறது.

சென்னை மகளிர் சங்கம் சார்பில் சேத்துப்பட்டு மலையாளி கிளப்பில் நாளை காலை மகளிர் தின விழா நடைபெறுகிறது. இதில் சிறந்த சேவைக்கான ரெயில்வே வாரிய விருது வென்றவர்கள் கவுரவிக்கப்படுகிறார்கள். மேலும் 2 பெண்களுக்கு விருதும் வழங்கப்படுகிறது.

திருவொற்றியூர் எண்ணூர் பவுண்டரிஸ் ஊழியர்கள் சங்க மண்ட பத்தில் நாளை மாலை 3 மணிக்கு மகளிர் தின விழா நடைபெறுகிறது. இதில் இந்திய கூடைப்பந்து அணி கேப்டன், தெற்கு ரெயில்வே தலைமை அலுவலக கண்காணிப்பாளர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கிறார்கள்.

அதில் சமூக ஆர்வலருக்கான யோஷஸ்ரீ விருது சத்திய தனகோடி என்பவருக்கு வழங்கப்படுகிறது. மேலும் அந்த நிகழ்ச்சியில் பெண் துப்புரவு பணியாளர்கள் 25 பேர் கவுரவிக்கப்படுகிறார்கள்.

மேலும் 9 முதல் 14 வயது சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு தடுப்பூசி போடப்படுகிறது.

தேனாம்பேட்டை கேசரி மேல்நிலைப்பள்ளியில் மகளிர் தின விழா நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடை பெறுகிறது. கவிஞரும், மலையாள மிஷன் ஆசிரியை யுமான ராதாதேவி தலைமை தாங்குகிறார். கலாச்சார மாநாட்டை கேசரி கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் டாக்டர் ஹரிணி தொடங்கி வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் இசை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த பெண்களுக்கு விருது வழங்கப்படுகிறது.

சாரதி அகாடமி மற்றும் மலையாளி கிளப் மகளிர் பிரிவு சார்பில் சமூக அநீதி களுக்கு எதிரான கவிதை, நடனம், பாடல் மூலம் கவிதைகள் எழுதிய பல்வேறு கவிஞர்களின் படைப்புகள் அடங்கிய சிறப்பு கண்காட்சி நடை பெறுகிறது. இந்த கண்காட்சி வருகிற 15-ந்தேதி மாலை நடைபெறுகிறது.

பெருங்குடி கேரள சமாஜம் மகளிர் பிரிவு சார்பில் பெண்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நாளை காலை 11 மணி முதல் 2 மணி வரை சமாஜம் ஹாலில் நடக்கிறது. இதில் கண்புரை அறுவைசிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு இலவச அறுவை சிகச்சை செய்ய ஏற்பாடு செய்யப்படுகிறது.

திருமுல்லைவாயல் விஸ்வகர்மா பவனில் 9-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை பெண்களுக்கு விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், கலாச்சார ஒன்று கூடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இதேபோன்று அனைத்து மலையாளி பெண்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேற அமைப்புகள் சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னையில் பலவேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

Tags:    

Similar News