14 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த வழக்கில் மேலும் 2 பேர் கைது
- ஊருக்கு திரும்பி வந்த சிறுமி திருமணம் பிடிக்கவில்லை என கூறி கணவர் வீட்டிற்கு செல்ல மாட்டேன் என கூறியுள்ளார்.
- வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
தளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த அஞ்செட்டி தாலுகாவிற்கு உட்பட்ட தொட்டமஞ்சு பகுதியைச் சேர்ந்தவர், 14 வயது சிறுமி. 7 ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்தார்.
இந்த சிறுமிக்கும் காளிக்குட்டை மலை கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி மாதேஷ் (வயது29) என்பவருக்கும் கடந்த 3-ந் தேதி பெங்களூருவில் திருமணம் நடந்தது. இதற்கு சிறுமியின் தாய் உதவியாக இருந்துள்ளார். நேற்று முன்தினம் ஊருக்கு திரும்பி வந்த சிறுமி திருமணம் பிடிக்கவில்லை என கூறி கணவர் வீட்டிற்கு செல்ல மாட்டேன் என கூறியுள்ளார். தன்னுடைய பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதனால் சிறுமியை திருமணம் செய்த மாதேஷ் மற்றும் அவரது அண்ணன் மல்லேஷ் (38), மற்றும் உறவினர் வீட்டில் அழுதபடி இருந்த சிறுமியை குண்டுகட்டாக காளிக்குட்டை கிராமத்திற்கு துாக்கி சென்றனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து சிறுமியின் பாட்டியிடம் புகார் பெற்ற தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் சிறுமியை திருமணம் செய்த மாதேஷ், அவரது அண்ணன் மல்லேஷ் மற்றும் சிறுமியின் தாய் ஆகிய 3 பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சிறுமியின் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த தந்தை மற்றும் மல்லேஷ் மனைவி முனியம்மாள் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.