உலகம்

ஹிலாரி கிளிண்டன்-மெஸ்சி உள்பட பிரபல தொழில் அதிபர் ஜாார்ஜ் சொரோசுக்கு அமெரிக்காவின் உயரிய விருது

Published On 2025-01-05 06:27 GMT   |   Update On 2025-01-05 06:27 GMT
  • ஜோபைடனின் பதவிகாலம் வருகிற 20-ந்தேதி முடிகிறது.
  • ஜார்ஜ் சொரோஸ், இந்திய பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து வந்தவர்.

வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் ஜோபைடனின் பதவிகாலம் வருகிற 20-ந்தேதி முடிகிறது. அன்று தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் புதிய அதிபராக பதவியேற்கிறார்.

இந்த நிலையில் அமெரிக்காவின் உயரிய குடிமகன் விருதான அதிபர் சுதந்திரப் பதக்க விருதுக்கு 19 பேரை அதிபர் ஜோபைடன் அறிவித்தார்.


அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், முதலீட்டாளர் ஜார்ஜ் சொரோஸ், முன்னணி கால்பந்து வீரரான அர்ஜென்டினாவை சேர்ந்த லியோனல் மெஸ்சி, ஆடை வடிவமைப்பாளர் ரால்ப் லாரன், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மறைந்த ஆஷ்டன் கார்ட்டர் உள்பட 19 பேர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடந்த விழாவில் விருதுகளை ஜோபைடன் வழங்கினார். விருது பெற்ற ஹிலாரி கிளிண்டன் அமெரிக்க செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார்.


மேலும் அமெரிக்க அரசியல் கட்சியால் அதிபர் வேட்பாளருக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார். அவரது பொது சேவைக்காக இவ்விருது வழங்கப்பட்டது. பிரபல முதலீட்டாளரான 94 வயது ஜார்ஜ் சொரோஸ் விழாவில் பங்கேற்கவில்லை. விருதை அவரது மகன் அலெக்ஸ் சொரோஸ் தனது தந்தையின் சார்பாக ஏற்றுக் கொண்டார்.

இதுதொடர்பாக ஜார்ஜ் சொரோஸ் கூறும்போது, `அமெரிக்காவில் சுதந்திரத்தையும் செழிப்பையும் கண்ட ஒரு புலம்பெயர்ந்தவர் என்ற முறையில், இந்த மரியாதையால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன் என்றார்.


ஜார்ஜ் சொரோஸ், இந்திய பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து வந்தவர். அவர் இந்தியாவுக்கு எதிராக அவதூறு பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாக பா.ஜ.க. தெரிவித்தது.

சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா, இணைத் தலைவராக உள்ள தொண்டு நிறுவனத்திற்கு, ஜார்ஜ் சொரோசின் தொண்டு நிறுவனம் நிதி உதவி செய்வதாக பா.ஜ.க. குற்றம் சாட்டியது.

இவ்விவகாரத்தில் பாராளுமன்றத்திலும் பா.ஜ.க. குரல் எழுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது. ஜார்ஜ் சொரோசுக்கு விருது வழங்கப்பட்டதற்கு உலக பணக்காரரான எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அவர் கூறும்போது, சொரோசுக்கு விருது வழங்கப்பட்டது கேலிக்குரியது. அவர் அடிப்படையில் மனிதகுலத்தை வெறுக்கிறார் என்று நான் நம்புகிறேன் என்றார்.

கால்பந்து வீரர் மெஸ்சி, போட்டிகள் மற்றும் வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றதால் இந்த விருது விழாவில் கலந்து கொள்ள முடிய வில்லை.

Tags:    

Similar News