search icon
என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • 8 நாளில் திரும்பி வரக்கூடிய சுனிதா வில்லியம்சன் 160 நாட்களுக்கு மேல் ஐஎஸ்எஸ்-ல் தவித்து வருகிறார்.
    • சுனிதா வில்லியம்சின் உடல்நில குறித்து பல்வேறு கருத்துகள் வெளியாகி வருகின்றன.

    நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றனர். 8 நாட்களில் மீண்டும் பூமிக்கு திரும்புவதுதான் திட்டம். ஆனால் போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழிலநுட்ப கோளாறு ஏற்பட்டதால் சுமார் ஐந்து மாதங்களுக்கு மேல் அங்கேயே தங்கியிருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இதன்காரணமாக இருவருடைய உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக கூறப்பட்டது. சுனிதா வில்லியம்ஸ் எடை குறைந்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து இருவருடைய உடல்நிலை குறித்து நாசா மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறது.

    அவர்களுடைய உடல்நலம் மற்றும் உணவுகள் விசயத்தில் மிகவும் உன்னிப்பாக கவனித்து வரும் நிலையில், தண்ணீர் சரியான முறையில் பயன்படுத்துதல் மற்றும் அதிக அளவிலான கழிவை குறைத்தல் ஆகியவற்றிலும் கவனம் செலுத்துவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இருவரின் சிறுநீர் மற்றும் வியர்வை ஆகியவை மறுசுழற்சி மூலம் பிரெஷ் வாட்டராக மாற்றப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படுவதாக அமெரிக்காவின் நியூயார்க் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மற்றொரு பக்கம் விண்வெளி நிலையத்தில் உள்ள 530 கலோன் பிரெஷ் வாட்டர் டேங்கில் இருந்து தேவைப்படும் தண்ணீர் எடுக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

    • ஸ்டார்ஷிப் ராக்கெட் சோதனை டெக்சாசின் ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்பேஸ் தளத்தில் நடத்தப்பட்டது.
    • ராக்கெட் சோதனையை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் நேரில் பார்வையிட்டார்.

    வாஷிங்டன்:

    உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஸ்டார்ஷிப் ராக்கெட்டை உருவாக்கியுள்ளது.

    உலகின் மிகவும் சக்திவாய்ந்த ராக்கெட்டின் 6-வது சோதனை தெற்கு டெக்சாசில் உள்ள ஸ்பேஸ் எக்ஸின் ஸ்டார்பேஸ் தளத்தில் நடத்தப்பட்டது. ஸ்டார்ஷிப் ஏவப்பட்ட சிறிது நேரத்திலேயே அதன் இரண்டு நிலைகளையும் வெற்றிகரமாகப் பிரித்தது.

    சூப்பர் ஹெவி பூஸ்டர் என அழைக்கப்படும் முதல் நிலை, ஏவுதளத்திற்குத் திரும்புவதற்குப் பதிலாக மெக்சிகோ வளைகுடாவில் தரையிறங்கியது.

    ஸ்டார்ஷிப் 2-ம் நிலை அதன் பயணத்தைத் தொடர்ந்தது. ஒரு மணி நேரத்திற்குள் உலகத்தை பாதியாகச் சுற்றி ஒரு துணைப் பாதையை அடைந்தது. ஏவப்பட்ட சுமார் 65 நிமிடங்களுக்குப் பிறகு விண்கலம் இந்தியப் பெருங்கடலில் தரையிறக்கப்பட்டது. இதில் ஸ்டார்ஷிப் விண்கலத்தில் வெப்ப கவச் சோதனைகளை நடத்தியது. வளிமண்டல மறு நுழைவின் கடுமையான சூழ்நிலைகளில் வாகனத்தின் செயல்திறன் பற்றிய அத்தியாவசிய தாவுகளை சேகரித்தது.

    இந்நிலையில், இந்த ராக்கெட் சோதனையை அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் நேரில் பார்வையிட்டார். அப்போது அவருடன் எலான் மஸ்க்கும் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஆயிரம் நாட்களைக் கடந்துள்ளது.
    • தலைநகர் கீவில் உள்ள அமெரிக்க தூதரகம் தற்காலிகமாக மூடப்படுகிறது.

    வாஷிங்டன்:

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஆயிரம் நாட்களைக் கடந்துள்ளது. ரஷியாவை எதிர்த்து போரிடும் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன.

    ரஷியாவுடன் இணைந்து வடகொரிய படைகள் தாக்க உள்ளதால், தொலைதூரத்தில் தாக்கி அழிக்கும் ஏவுகணைகளைப் பயன்படுத்த அமெரிக்க அரசு உக்ரைனுக்கு அனுமதி அளித்தது.

    இதனால் அதிபர் புதின், ரஷிய படைகள் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த அனுமதி கொடுத்துள்ளதால் போர் தீவிரமடைந்துள்ளது.

    எந்நேரமும் உக்ரைனில் அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால் அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள அமெரிக்க தூதரகம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், உக்ரைன் வாழ் அமெரிக்கர்களும் பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    • வீடியோ WOKE கலாச்சாரத்தை ஊக்குவிப்பதால் மஸ்க் கொதிப்படைந்துள்ளார்.
    • உங்கள் மார்க்கெட்டிங் டீமை வேலையில் இருந்து முதலில் தூக்குங்கள் என்று தெரிவித்துள்ளார்.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் தனது ஏகபோக ஆதரவை பெற்ற டொனல்டு டிரம்ப் வெற்றி பெற்றதில் இருந்தே எலான் மஸ்க் பயங்கர குஷியில் உள்ளார். அவருக்கு டிரம்ப் அமைச்சரவையில் Department of Government Efficiency or DOGE துறை பொறுப்பு விவேக் ராமசாமியுடன் பகிர்தளிக்கப்பட்டுள்ளது.

    தனக்கு சொந்தமான எக்ஸ் தளத்தில் படு ஆக்டிவாக போஸ்டர்களை போட்டு வரும் எலான் மஸ்க் தற்போது ஜாகுவார் கார் நிறுவனத்தை வம்புக்கு இழுத்துள்ளார். சுமார் 101 ஆண்டுகளாக கார் தயாரிப்பு தொழிலில் இருக்கும் ஜாகுவார் நிறுவனம் தனக்கென ஒரு பிராண்ட் வேல்யூவை உருவாக்கி வைத்துள்ளது. இந்நிலையில் தனது நிறுவன லோகவை புதுப்பிக்க ஜாகுவார் முடிவெடுத்துள்ளது.

    ஜாகுவார் பாய்வது போன்ற வடிவமைப்பை கொண்ட அந்நிறுவனத்தின் லோகோ பிரசித்தமாக இருந்துவரும் நிலையில் அதை புதுப்பிதுள்ளதாக வீடியோ வெளியிட்டு அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த வீடியோ பன்மைத்துவம் மற்றும் பாலின சமத்துவம், சமூக முன்முடிவுகளை உடைக்கும் தனிநபர் சுதந்திரம் ஆகியவற்றை அடியொற்றி அமெரிக்காவில் உருவான WOKE culture கலாச்சார தோரணையில் உள்ளது பழமைவாதியான எலான் மஸ்க்கை கொதிப்படைய செய்து இது குறித்து பேச வைத்திருக்கிறது.

    ஜாகுவாரின் முடிவு குறித்து பேசியுள்ள அவர், நீங்கள் கார்களை தான் தயாரிக்கிறீர்களா, நீங்கள் உண்மையில் விற்பது கார்களை தானா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அவர்கள் கார்களை தயாரிக்க வில்லை, தவறுகளை தயாரிக்கிறார்கள் என்றும், உங்கள் மார்க்கெட்டிங் டீமை வேலையில் இருந்து முதலில் தூக்குங்கள் என்று தெரிவித்துள்ளார்.

    பழமைவாதியான எலான் மஸ்க் தன்னை ஒத்த பழமைவாத சிந்தனை உடையதாலேயே டிரம்புக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி வருகிறார் என்பது ஜனநாயகவாதிகளின் வாதம். அமெரிக்காவில் டிரம்ப் ஆட்சியில் மக்கள் மீதான அரசின் கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கும் என்பதே லிபரல்களின் அச்சமாக உள்ளது.

    முன்னதாக எலான் மஸ்க்கின் மகள் விவியன் வில்சன் மூன்றாம் பாலினத்தைச் சேர்த்தவராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். இதனால் உயிரோடிருக்கும் தனது மகன் சேவியர் இறந்துவிட்டாள் என்று மஸ்க் போட்டுவெளியில் கூறி வருவது குறிப்பிடத்தக்கது. 

     

    • ஸ்டான்ட் அப் காமெடியன் காலிமார் வைட் இந்த விசித்திர நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
    • இந்த வசைபாடும் ஏஜென்ட் பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்குச் சிறப்புத் தகுதிகள் இருக்க வேண்டும்

    நிறுவனத்தின் பணியிடத்தில் மேலதிகாரிகளின் நியமற்ற செயல்களால் ஊழியர்கள் பாதிக்கப்படுவது வழக்கம். மேலதிகாரிகளைச் சட்டையைப் பிடித்து திட்ட வேண்டும் என்று பலருக்கும் தோன்றுவது இயல்பே.

    ஆனால் அதன் பின்விளைவுகள், வேலை இழப்பு என பல பிரச்சனைகள் ஊழியர்களின் கையை கட்டிப்போட்டு விடுகின்றன. ஆனால் ஆள் வைத்து அடிப்பது போல் தற்போது ஆள் வைத்து திட்டும் சேவை அமெரிக்காவில் அறிமுகமாகியுள்ளது.

     

    வொர்க் பிரஷர், டிப்ரஷன், சம்பள உயர்வின்மயால் ஏற்படும் பொருளாதார நெருக்கடி என மேலதிகாரிகள் செயல்களால் பாதிக்கப்படும் ஊழியர்கள் இந்த விசித்திர சேவையை பயன்படுத்தி தங்கள் ஆள் மன ஆசையை நிறைவேற்றிக் கொள்ளலாம். அமெரிக்காவை சேவை ஸ்டான்ட் அப் காமெடியன் காலிமார் வைட் இந்த விசித்திர நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இவருக்கு இன்ஸ்ட்டாகிராமில் 280,000 பாலோயர்கள் உள்ளனர்.

    அலுவலக புகார்கள் மற்றும் பிரச்சனைகள் ஏஜென்சி [OCDA (Office Complaints and Disputes Agency)] என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை உருவாக்கி அவர் இந்த சேவையை வழங்கி வருகிறார்.

     

    ஊழியர்களின் பிரச்சனைகளை சரிசெய்து அவர்களின் சுயமரியாதை மீட்டெடுத்து ஆரோக்கியமான பணி சூழலை உருவாக்குவதே தங்கள் நிறுவனத்தின் நோக்கம் இதன் இணையதள பக்கம் தெரிவிக்கிறது. இந்த இனையதளத்தில் எந்த வகையான நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்களும் தங்கள் பிரச்சனையைப் பதிவு செய்யலாம். அதனை ஆராய்ந்து, சம்பந்தப்பட்ட ஊழியரின் அலுவலகத்துக்கு இந்த OCDA ஏஜெண்டுகள் செல்வார்கள்.

     

    அங்கு மேலதிகாரியையோ, மேனேஜரையோ, முதலாளியையோ சந்தித்து புகார் கொடுத்த ஊழியர்களின் சார்பில் தயாரிக்கப்பட்ட ஸ்க்ரிப்ட்டின் படி திட்டுவதோ, அல்லது பிரச்சனைகளை எடுத்துரைக்கவோ செய்வார்கள். அதற்கு அந்த முதலாளி என்ன எதிர்ப்பு சொன்னாலும், இந்த ஏஜெண்டுகள் தாங்கள் கூறவந்ததை அழுத்தம் திருத்தமாக அவருக்கு உரைக்கும் வகையில் கூறிவிட்டுதான் அங்கிருந்து நகர்வார்கள். புகார் அளித்த ஊழியரின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்பது கூடுதல் சிறப்பு.

    இந்த ஏஜெண்டுகள் தொழில்முறை வசைபாடுபவர்கள் [scolder] என்று அழைக்கப்டுகின்றனர். ஒரு வேலை புகார் அளித்த ஊழியரின் நிறுவனம் தங்கள் சேவை எல்லைக்கு அப்பால் வேரோரு நகரத்தில் இருந்தால் போன் மூலமாக இந்த ஏஜெண்டுகள் நிறுவன மேலதிகாரியை தொடர்புகொண்டு பேசுவார்கள். 

     இந்த OCDA நிறுவனம் 80,000 சப்ஸ்கிரைபர்களுடன் யூடியூப் சேனலும் வைத்துள்ளது. அதில் தங்கள் கிளைன்ட்டுகள் சார்பில் ஏஜெண்டுகள் மேலதிகாரிகளிடம் பேசும் வீடியோக்கள் பதிவிடப்படுகின்றன. இந்த வீடியோவில் ஒன்று சமீபத்தில் வைரலான நிலையில் இந்த நிறுவனம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    இந்தியாவில் இதன் சேவைகள் வழங்கபடுமா அல்லது கிளைகள் தொடங்கப்படுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். இதற்கிடையே இந்த வசைபாடும் ஏஜெண்டுகளுக்கான ஆளெடுப்பும் நடந்து வருகிறது.

    இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்குச் சிறப்புத் தகுதிகள் இருக்க வேண்டுமாம், அதாவது, தங்கள் குழந்தைகளை அதிகம் திட்டிக்கொண்டிருக்கும் பெற்றோர் இதற்கு விண்ணப்பிக்கலாம் அதிலும், தனியாளாகக் குழந்தையை வளர்க்கும் சிங்கிள் பேரெண்ட் ஆக இருப்பது அதி உத்தமம். 

    • லிண்டா மெக்மஹோன் தொழில்முறை மல்யுத்த கோடீஸ்வர பெண்மணி ஆவார்.
    • 2017 முதல் 2019 வரை டிரம்ப் ஆட்சிக்காலத்தில் பணியாற்றியுள்ளார்.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். தற்போது ஜோ பைடன் அரசு அமைதியான முறையில் அதிகாரத்தை மாற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

    இதற்கிடையே ஒவ்வாரு துறைக்கும் அதிகாரிகளை நியமித்து வருகிறார் டொனால்டு டிரம்ப். இந்த நிலையில் கல்வித்துறை செயலாளராக கோடீஸ்வர மல்யுத்த பெண்மணி லிண்டா மெக்மஹோனை பரிந்துரை செய்துள்ளார்.

    மெக்மஹோன் கடந்த டொனால்டு டிரம்ப் ஆட்சி காலத்தில் 2017 முதல் 2019 வரை சிறு வணிக நிர்வாகத்தை வழிநடத்தினார். இரண்டு முறை குடியரசு கட்சி சார்பில் கனெக்கடிகட்ல் இருந்து செனட்டிற்கு போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

    2009-ல் இருந்து கனெக்டிக்கட் கல்வி வாரியத்தில் பல வருடங்கள் பணிபுரிந்துள்ளார். பல்கலைக்கழக அறக்கட்டளை குழுவிழும் பணியாற்றியுள்ளார். டிரம்ப் அகற்றுவதாக உறுதியளித்த அமைப்பின் துறையின் தலைமை பொறுப்பை ஏற்க உள்ளார்.

    அமெரிக்காவின் கல்வித்துறை செயலாளராக பரிந்துரை செய்யப்பட்டாலும், கல்வி வட்டாரங்களில் தெரியாத முகமாகவே காணப்படுகிறார்.

    • எல்லைக்குள் புகுந்தவர்களை நாடு கடத்துவேன் என்று டிரம்ப் தெரிவித்தார்
    • டிரம்பின் நாடு கடத்தல் நேரடியாக 2 கோடி குடும்பங்களைப் பாதிக்கும்

    அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலம் வரும் ஜனவரி மாதம் முடிவடைய உள்ள நிலையில் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த நவம்பர் 5 ஆம் தேதி நடந்து முடிந்தது. இதில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.

    இவர் கடந்த 2016 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் அமெரிக்க அதிபராக இருந்தவர் ஆவார். தனது பதவிக்காலத்தில் அமெரிக்காவில் அதிகரித்து வரும் சட்டவிரோதமான குடியேறிகள் மீது கடுமையான போக்கை டிரம்ப் கையாண்டார்.

    தொடர்ந்து அமைந்த ஜோ பைடன் ஆட்சியில் சற்று தளர்வான சூழல் நிலவிய நிலையில் தற்போது டிரம்ப் மீண்டும் பதவியேற்றுள்ளது விஷயத்தை மீண்டும் தீவிரப்படுத்தி உள்ளது. டிரம்ப் தனது தேர்தல் பிரசாரத்தின் போதே சட்டவிரோத குடியேற்றம் குறித்து அதிகம் பேசினார்.

     

    சட்டவிரோதமாக அமெரிக்க எல்லைக்குள் புகுந்தவர்களை நாடு கடத்தி, மெக்சிகோவுடனான எல்லையை உறுதி செய்து நாட்டை பாதுகாப்பேன் என்று டிரம்ப் தெரிவித்தார்.

    இந்நிலையில் டிரம்ப் தலைமையிலான ஆட்சியில் தேசிய அவசரநிலை கொண்டு வரப்பட்டு, ராணுவத்தை பயன்படுத்தி புலம்பெயர்ந்தவர்களை நாடு கடத்தவுள்ளார் என்று ட்ரூத் என்ற சமூக ஊடகத்தில் ஒருவர் பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள டிரம்ப், 'அது உண்மைதான்' என்று ஒப்புக் கொண்டுள்ளார்.

     

    அமெரிக்காவில் சுமார் 1.1 கோடி மக்கள் சட்டவிரோதமாக தங்கியுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. டிரம்பின் நாடு கடத்தல் நேரடியாக 2 கோடி குடும்பங்களைப் பாதிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது

    • அமெரிக்காவை சேர்ந்த எலான் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
    • தனியார் நிறுவனங்களின் ராக்கெட்டுகள் மூலமும் செயற்கைக்கோள்கை ஏவும் முயற்சியில் இஸ்ரோ இறங்கியுள்ளது.

    வாஷிங்டன்:

    இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ ஆண்டுதோறும் பல செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டு வந்தன.

    அதேவேளை, தனியார் நிறுவனங்களின் ராக்கெட்டுகள் மூலமும் செயற்கைக்கோள்கை ஏவும் முயற்சியில் இஸ்ரோ இறங்கியுள்ளது.

    அந்த வகையில், உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான அமெரிக்காவை சேர்ந்த எலான் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்நிறுவனத்திற்கு சொந்தமான ராக்கெட் மூலம் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ செயற்கைக்கொளை விண்ணில் ஏவியுள்ளது.

    ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் இஸ்ரோவின் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஜிசாட் - என்2 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

    இஸ்ரோவுக்கும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கும் இடையே வர்த்தக ரீதியில் செயற்கைக்கோள் ஏவப்படுவது இதுவே முதல்முறையாகும்.

    • அன்மோல் பிஷ்னோய் தேடப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    • சிறப்பு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து இருந்தது.

    பிரபல கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வைத்து கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாடகர் சித்து மூஸ்வாலா கொலை மற்றும் இந்த ஆண்டு சல்மான் கான் வீட்டிற்கு வெளியே நடந்த துப்பாக்கி சூடு உள்பட பல வழக்குகள் தொடர்பாக அன்மோல் பிஷ்னோய் தேடப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுதவிர கடந்த மாதம் மகாராஷிடிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொல்லப்பட்ட வழக்கில் பிஷ்னோய் தேடப்பட்டு வந்தார். கைது செய்யப்பட்டதாக கூறப்படும் அன்மோல் பிஷ்னோய் காவலில் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    முன்னதாக இம்மாத தொடக்கத்தில், மும்பை காவல்துறையின் குற்றப்பிரிவு அவரை அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தும் பணியைத் தொடங்கியது. அவரை கைது செய்ய மகாராஷ்டிரா சிறப்பு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து இருந்தது.

    உலகளாவிய சட்ட அமலாக்க நிறுவனமான இன்டர்போல் மூலம் ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிடப்பட்டது. முன்னதாக அன்மோல் பிஷ்னோய் கனடாவில் இருப்பதாக நம்பப்பட்டது.

    இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பான தேசிய புலனாய்வு அமைப்பு, கடந்த மாதம் அன்மோல் பிஷ்னோயை மிகவும் தேடப்படும் பட்டியலில் சேர்த்தது. அவரை கைது செய்ய உதவுபவர்களுக்கு ரூ. 10 லட்சம் பரிசும் அறிவிக்கப்பட்டது.

    • செயற்கை கோள் சுமார் 4,700 கிலோ எடை கொண்டது.
    • இஸ்ரோ மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் இடையேயான முதல் வணிக ஒத்துழைப்பு.

    வாஷிங்டன்:

    உலக பணக்காரரான எலான்மஸ்க் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமமும் (இஸ்ரோ) இணைந்து விண்வெளிக்கு இந்திய வீரரை அனுப்பும் முயற்சியில் மறைமுகமாக ஈடுபட்டு வருகிறது. இந்த திட்டம் அடுத்த ஆண்டு (2025) செயல்படுத்தப்படலாம் என தெரிகிறது.

    இந்த நிலையில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன ராக்கெட் மூலம் இந்தியாவின் ஜி.சாட் தகவல் தொழில் நுட்ப செயற்கைகோளை விண்ணில் செலுத்த இருக்கிறது.

    அமெரிக்காவின் புளோரிடா கேப் சுனாவரலியில் இருந்து பால்கன் 9 ராக்கெட்டை பயன்படுத்தி இந்த செயற்கைகோள் விண்ணில் ஏவப்படுகிறது.

    ஜி சாட் என் 2 என குறிப்பிடப்பட்ட இந்த செயற்கை கோள் சுமார் 4,700 கிலோ எடை கொண்டது. இந்தியாவின் தகவல் தொடர்பு கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த செயற்கை கோள் செயல்பாட்டுக்கு வந்ததும் நாடு முழுவதும் தனது சேவைகளை வழங்கும்.

    தொலைதூர பகுதிகளுக்கான இணையசேவை இணைப்பு மற்றும் விமானத்தில் உள்ள இணைய சேவை உள்ளிட்ட நாடு முழுவதும் முக்கிய சேவைகளை இந்த செயற்கைகோள் வழங்கும்.

    இது இஸ்ரோ மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் இடையேயான முதல் வணிக ஒத்துழைப்பு ஆகும்.

    • உக்ரைனுக்கு அமெரிக்கா நீண்ட தூரம் சென்று தாக்குதல் ஏவுகணைகளை வழங்கியுள்ளது.
    • வடகொரியா ராணுவ வீரர்கள் ரஷியாவுக்கு உதவி செய்து வருவதால் ஜோ பைடன் தற்போது ஒப்புதல்.

    உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னும் இரு நாடுகளுக்கு இடையிலான சண்டை முடிவுக்கு வரவில்லை. ரஷியாவை எதிர்த்து போரிட அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ராணுவ உதவி செய்து வருவதால் பதிலடி கொடுத்து வருகிறது.

    அமெரிக்கா நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவகணைகளை உக்ரைனுக்கு வழங்கியுள்ளது. ஆனால் தங்களுடைய ஒப்புதல் இல்லாமல் அதை பயன்படுத்தக்கூடாது என அமெரிக்க திட்டவட்டாக தெரிவித்திருந்தது.

    தற்போது ரஷியாவுக்கு ஆதரவாக வடகொரியா 10 ஆயிரம் வீரர்களை அனுப்பியுள்ளது. இந்த சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டுமென்றால் நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்காவுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

    இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஏவுகணைகளை பயன்படுத்த ஒப்புதல் வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து வரும் நாட்களில் உக்ரைன் ரஷியாவுக்கு எதிராக நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்தலாம் எனத் தெரிகிறது.

    இது தொடர்பாக வெள்ளை மாளிகை கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

    இந்த மாதம் தொடக்கத்தில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அப்போது உக்ரைன்-ரஷியா இடையிலான போர் விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்படும் எனத் தெரிவித்தார்.

    இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் வழங்கியுள்ளது உக்ரைன்- ரஷியா இடையிலான போரை மேலும் தூண்டும். ஜோ பைடனின் அதிபர் ஆட்சிக்காலம் ஜனவர் 20-ந்தேதி வரை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஒரு இடத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் காயம் அடைந்தனர்.
    • மற்றொரு இடத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்தனர்.

    அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள நியூ ஓர்லேன்ஸில் உள்ள செயின்ட் ரோச் (St Roch neighbourhood) நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக தனியார் கார் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்ற சிறிது நேரத்தில் அல்மோனாஸ்டர் அவென்யூ பிரிட்ஜ் பகுதியில் மற்றொரு துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு நபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இருவர் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். யாரையும் கைது செய்யவில்லை. சந்தேகப்பட்டு நபர்கள் என்ற தகவலையும் வௌயியடவில்லை. பிரெஞ்ச் குவார்ட்டர் (French Quarter) என்ற பிரபல நகரின் அருகில்தான் செயினட் ரோச் நெய்பர்ஹூட் உள்ளது. பிரெஞ்ச் குவார்ட்டர் பிரபல சுற்றுலா பகுதியாகும்.

    கடந்த 10-ந்தேதி அலபாமாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 16 பேர் காயம் அடைந்தனர்.

    அணிவகுப்பு நடைபெறும் பகுதியிலும், கொண்டாட்டம் நிகழ்ச்சியிலும் துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×