உலகம்

கத்தார் மன்னர் நாளை இந்தியா வருகை- பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை

Published On 2025-02-16 11:14 IST   |   Update On 2025-02-16 11:14:00 IST
  • இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் தொடர்ந்து வலுப்பெற்று வருகின்றன.
  • கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானி இந்தியாவுக்கு 2-வது முறையாக வருகிறார்.

தோகா:

கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானி 2 நாள் அரசுமுறை பயணமாக நாளை இந்தியா வருகிறார். அவர் 17, 18-ந்தேதிகளில் இந்தியாவில் பயணம் மேற்கொள்ள உள்ளார். இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானி இந்தியாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார். அவரது பயணம் எங்கள் வளர்ந்து வரும் பன்முக கூட்டாண்மைக்கு மேலும் உத்வேகத்தை அளிக்கும்.

கத்தார் மன்னருக்கு 18-ந்தேதி ஜனாதிபதி மாளிகையில் சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்படும். அவர் ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் கலந்துரையாடுவார். அப்போது மன்னருக்கு விருந்து அளிக்கப்படும். பின்னர் கத்தார் மன்னர்-பிரதமர் மோடி இருதரப்பு உறவுகளின் பல்வேறு அம்சங்களைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.

இந்தியாவும் கத்தாரும் நட்பு, நம்பிக்கை மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் ஆழமான வேரூன்றிய வரலாற்று உறவுகளைக் கொண்டுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் தொடர்ந்து வலுப்பெற்று வருகின்றன. கத்தாரில் வசிக்கும் இந்திய சமூகம் கத்தாரின் மிகப்பெரிய வெளிநாட்டு சமூகத்தை உருவாக்குகிறது என்று தெரிவித்துள்ளது.

கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானி இந்தியாவுக்கு 2-வது முறையாக வருகிறார். இதற்குமுன்பு கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவுக்கு வந்திருந்தார்.

Tags:    

Similar News