புதுச்சேரி
null

தமிழக ரேசன் கடையில் வழங்கப்படும் அரிசியை பார்வையிட்ட புதுச்சேரி முதலமைச்சர்

Published On 2024-07-24 05:13 GMT   |   Update On 2024-07-24 06:00 GMT
  • அரசியல் கட்சிகளும் ரேசன்கடைகளை திறக்க வலியுறுத்தி வந்தன.
  • பருப்பு, சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

புதுச்சேரி:

புதுச்சேரியில் கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ரேசன் கடைகள் மூடப்பட்டன.

ரேசன் கடைகளில் வழங்கி வந்த இலவச அரிசிக்கு பதிலாக பயனாளிகள் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டு வந்தது. ஆனால் ரேசன் கடைகளை திறந்து இலவச அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுந்து வந்தது.

அரசியல் கட்சிகளும் ரேசன் கடைகளை திறக்க வலியுறுத்தி வந்தன. நடந்து முடிந்து பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் முதலமைச்சர் ரங்கசாமியிடம் ரேசன் கடைகளை எப்போது திறப்பீர்கள்? என பெண்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது விரைவில் ரேசன்கடைகள் திறக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி உறுதியளித்தார். இதையடுத்து கடந்த 7 ஆண்டாக மூடிக்கிடக்கும் ரேசன்கடைகளை திறக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான கோப்புக்கு கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் அனுமதியும் அளித்துள்ளார். இதையடுத்து ரேசன்கடைகளை திறந்து மீண்டும் இலவச அரிசி, அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.

புதுச்சேரியில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள சிகப்பு ரேசன்கார்டுதாரர்களுக்கு 20 கிலோ அரிசியும், மஞ்சள் ரேசன்கார்டுதாரர்களுக்கு 10 கிலோ அரிசியும் கடந்தகாலத்தில் வழங்கப்பட்டு வந்தது. தற்போது சிகப்பு ரேசன்கார்டுக்கு 20 கிலோ இலவச அரிசியும், மஞ்சள் ரேசன்கார்டுக்கு கிலோ ரூ.1 விலையில் 20 கிலோ அரிசியும் வழங்கப்பட உள்ளது.

இதோடு பருப்பு, சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் புதுவை முதலமைச்சர் ரங்கசாமி, புதுவையை ஒட்டியுள்ள தமிழக பகுதியான சின்ன முதலியார்சாவடி ரேசன்கடைக்கு சென்றார். வீட்டில் டென்னிஸ் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த அவர் அந்த உடையிலேயே சென்றார்.

அங்கு ரேசன்கடை ஊழியர்களிடம் வழங்கப்படும் அரிசி, பருப்பு ஆகியவற்றை கேட்டு பெற்று அதன் தரத்தை பார்வையிட்டார். தொடர்ந்து ரேசன்கடைகளில் மாதந்தோறும் என்ன பொருட்கள் வழங்கப்படுகிறது? என்ற விபரத்தையும் கேட்டறிந்தார்.

புதுவையில் ரேசன் கடைகள் மூலம் இலவச அரிசி வழங்க டெண்டர் விடப்பட்டு, அரிசி கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதற்காகவே தமிழக ரேசன் கடையில் வழங்கப்படும் அரிசியை முதலமைச்சர் ரங்கசாமி பார்வையிட்டுள்ளார்.

Tags:    

Similar News