புதுச்சேரி

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையை கண்டித்து புதுச்சேரியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்த காட்சி.

ஜெயலலிதா குறித்து அவதூறு பேச்சு- அண்ணாமலையை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

Published On 2023-06-13 04:47 GMT   |   Update On 2023-06-13 04:47 GMT
  • அண்ணாமலைக்கு ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவராக செயல்படக் கூடிய தலைமை பண்பு தேவைப்படுகிறது.
  • கூட்டணி தர்மத்தை மீறி மலிவு விளம்பரத்திற்காக தவறான தகவல்களை கூறி வருவதை புதுவை மாநில அ.தி.மு.க. வன்மையாக கண்டிக்கிறது.

புதுச்சேரி:

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதற்கு அ.தி.மு.கவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் அண்ணாமலையை கண்டித்து உப்பளம் தலைமை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாநில அவைத்தலைவர் அன்பானந்தம் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலைக்கு எதிராக கண்டன கோஷங்களை அ.தி.மு.கவினர் எழுப்பினர்.

தொடர்ந்து நிருபர்களிடம் மாநில செயலாளர் அன்பழகன் கூறியதாவது:-

தன்னுடைய தகுதி, உயரம் என்னவென்று தெரியாமல் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ஜெயலலிதா பற்றி தவறான கருத்தை கூறியுள்ளார். இது தி.மு.க.விற்கு வலு சேர்க்கும் வகையில் உள்ளது. அ.தி.மு.க.வை பற்றி பேச அண்ணாமலைக்கு எந்தவித தகுதியும், அருகதையும் கிடையாது.

அண்ணாமலைக்கு ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவராக செயல்படக் கூடிய தலைமை பண்பு தேவைப்படுகிறது. கூட்டணி தர்மத்தை மீறி மலிவு விளம்பரத்திற்காக தவறான தகவல்களை கூறி வருவதை புதுவை மாநில அ.தி.மு.க. வன்மையாக கண்டிக்கிறது.

கூட்டணியில் இருந்து கொண்டு அண்ணாமலை அ.தி.மு.க.வை பற்றி திட்டமிட்டு அவதூறு பரப்பும் வகையில் பேசுவது அபத்தமாகும். இதுபோல் அவதூறு பேசி வரும் அண்ணாமலையை தமிழக தலைவர் பதவியில் இருந்து பா.ஜனதா தேசிய தலைமை உடனடியாக நீக்க வேண்டும்.

எதிர்காலங்களில் அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கூட்டணி சேர்ந்தாலும் அவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ளாத முடியாத நிலை ஏற்படும். 3 மாதத்திற்கு ஒரு முறை அண்ணாமலை இதுபோல் அ.தி.மு.கவை அவதூறாக பேசி வருகிறார்.

இவ்வாறு அன்பழகன் கூறினார்.

Tags:    

Similar News