என் மலர்


அகத்தியா
கதாநாயகனின் ஸ்கேரி ஹவுஸில் உள்ள மர்மங்களை பற்றிய கதை
கதைக்களம்
பாண்டிச்சேரியில் உள்ள பாழடைந்த பங்களாவுக்கு கலை இயக்குனராக இருக்கும் நாயகன் ஜீவா படப்பிடிப்புக்காக செல்கிறார். அங்கு சில பிரச்சனைகளால் படப்பிடிப்பு நடக்காமல் போகிறது. இதனால் வருத்தம் அடையும் ஜீவா, அந்த பங்களாவில் ஸ்கேரி ஹவுஸ் (Scary House) நடத்துகிறார். மக்களிடம் நல்ல வரவேற்பை பெறும் அந்த ஸ்கேரி ஹவுஸில் கவுன்சிலர் மகன் மர்மமான முறையில் காணாமல் போகிறார். மேலும் அமானுஷ்ய சக்தி இருப்பதாக கூறி ஜீவாவின் ஸ்கேரி ஹவுஸ் மூடுகிறார்கள்.
இறுதியில் ஸ்கேரி ஹவுஸை ஜீவா திறந்தாரா? ஸ்கேரி ஹவுசில் இருக்கும் மர்மம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் ஜீவா, துறுதுறு இளைஞனாக நடித்து கவர்ந்திருக்கிறார். குறிப்பாக அம்மா பாசத்தில் நெகிழ வைத்து இருக்கிறார். பங்களாவில் என்ன நடக்கிறது என்று புரியாமல் தவிக்கும் போது கவனிக்க வைத்து இருக்கிறார்.
நாயகியாக நடித்து இருக்கும் ராஷி கண்ணா அழகாக வந்து சென்றிருக்கிறார். இவருக்கு அதிகம் வேலை இல்லை. மருத்துவராக வரும் அர்ஜுன், தனக்கே உரிய பாணியில் நடித்து அசத்தி இருக்கிறார். இவரது அலட்டல் இல்லாத நடிப்பு பல இடத்தில் பார்வையாளர்களை ரசிக்க வைக்கிறது. ஆங்கிலேயர்கள் கதாபாத்திரத்தில் வரும் அனைவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள். ராதாரவியின் நடிப்பு படத்திற்கு பலம்.
இயக்கம்
பழங்கால பங்களாவில் நடக்கும் அமானுஷ்ய சக்தியை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் பா.விஜய். 1940 ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஆங்கிலேயர்களான பிரெஞ்சு அரசாங்கம் அரியவகை மருந்துக்காக நடக்கும் பிரச்சனையை திரைக்கதையாக அமைத்து இருக்கிறார். பிளாஷ்பேக் குள் பிளாஷ்பேக் அமைத்து இருப்பது பலவீனம். ஜீவா ஒரு கட்டத்தில் இங்க என்ன நடக்கிறது என்று குழப்பம் அடைவார். அதுபோல் பார்ப்பவர்களும் குழப்பம் அடைகிறார்கள். கிளைமாக்ஸ் காட்சியை மட்டுமே விறுவிறுப்பை கொடுத்து இருக்கிறார் இயக்குனர். சித்தர்களுடைய கண்டுபிடிப்பு, தமிழர்களின் பாரம்பரிய மருத்துவம் ஆகியவற்றை இயக்குனர் பா.விஜய் பேசி இருப்பது சிறப்பு.
இசை
யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். குறிப்பாக என் இனிய பொன் நிலாவே பாடல் ரசிக்க வைக்கிறது. கிளைமாக்ஸ் காட்சியில் வரும் பின்னணி இசையில் மாஸ் காண்பித்து இருக்கிறார்.
ஒளிப்பதிவு
தீபக்கின் ஒளிப்பதிவு சிறப்பு. ஸ்கேரி ஹவுஸில் நம்மை பயப்பட வைக்க முயற்சித்துள்ளார்.
தயாரிப்பு
Vels Film International and WAMINDIA நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது.