என் மலர்


அரணம்
ஒரு வீட்டில் இருக்கும் அமானுஷ்யம் குறித்த கதை.
கதைக்களம்
ஜமீன்தார் ஒருவர் இரண்டு சகோதர மகன்களான பிரியன் மற்றும் லகுபரனை தத்தெடுக்கிறார். ஜமீன் வீட்டைத் தன் பெயருக்குப் பதிவு செய்வதற்காக எப்போதும் தன் தந்தையுடன் சண்டையிடும் மாயவன், எதிர்பாராதவிதமாக இறந்து போகிறான்.
சில காலங்களில் ஜமீன்தார் இறந்துவிடுகிறார். அதன் பின் சென்னையில் மனைவியுடன் வாழ்ந்து வரும் பிரியன், அந்த வீட்டில் தங்குகிறார். இரவு நேரத்தில் அந்த வீட்டில் அமானுஷ்ய சக்தி ஒன்று அவர்களை பயமுறுத்துகிறது.
இறுதியில் அந்த பங்களாவில் இருக்கும் மர்மம் என்ன? அமானுஷ்ய சக்தியை பிரியன் கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் பிரியன், தன்னால் முடிந்த அளவிற்கு நடிப்பு திறனை வெளிப்படுத்த முயற்சி செய்து இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் வர்ஷா, அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். லகுபரன் மற்றும் கீர்த்தனா ஆகியோர் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.
இயக்கம்
பல படங்களுக்கு பாடல்களை எழுதிய பிரியன், இப்படத்தில் கதாநாயகனாக நடித்து கதை, திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார். பேய் படங்களுக்கு உண்டான பழைய பாணியை கையாண்டு இருக்கிறார். படத்தில் சுவாரஸ்யமான காட்சிகள் இல்லாதது வருத்தம். பயமுறுத்தும் காட்சிகள் பெரியதாக எடுபடவில்லை.
இசை
சாஜன் மாதவ் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணியில் ஓரளவிற்கு கவனத்தை ஈர்த்து இருக்கிறார்.
ஒளிப்பதிவு
நித்தின் மற்றும் நௌசத் ஆகியோரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
படத்தொகுப்பு
பொன் கதிரேஷ் படத்தொகுப்பு ஓகே.
புரொடக்ஷன்
தமிழ் திரைக்கூடம் நிறுவனம் ‘அரணம்’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.
அரணம்.. தன் மாணவர்களுக்கு ஆசிரியர் அளித்த பெரும் வரம். சிறு தயாரிப்பாளர்களின் பெருமுயற்சி. வன்முறைகளை தள்ளிவைத்துவிட்டு அறம் பேசும் வரைமுறையை கற்றுத்தரும் பள்ளிக்கூடம். தன் மண்ணை, தன் வாழ்க்கைமுறையை மாற்ற நினைப்போருக்கு கற்பிக்கப்படும் பாடம். பணம் மற்றோரது எனும்போது அதை மற்றோருக்கும், வேண்டி நிற்போருக்கும் பகிர்ந்தளித்து உயில் வழி மரக்கன்று வழி காட்சியாக காட்டும்பொழுது மரியாதைக்குரிய அப்துல்கலாம் அவர்களும், சின்னக்கலைவாணர் விவேக் அவர்களும் கண்முன்னே வந்து போவதை மறுக்க முடியாது. உயிரை துச்சமென மதித்து துக்கத்தில் இருக்கும் மனிதனுக்கு வேலையும் கொடுத்து, படிக்கவும் உதவி செய்து "படிப்பு தான் வாழ்க்கை" எனச்சொல்லி அழுத்தமாக கல்வியின் உயர்வை போதிக்கும் காவியம். எதிரிய கூட மன்னிச்சிடலாம், ஆனா கூட நின்னே குழிபறிக்கிற துரோகிய மன்னிக்க முடியாது எனச் சொல்லும் போது ஒலிக்கும் கைத்தட்டுகளே வசனகர்த்தாவாகவும் வென்ற பாடலாசிரியர் பிரியன் சாரின் வெற்றிக்குச் சான்று. பார்த்தவர்கள் பாராட்டும் அரணம், ஆமா தியேட்டருக்குப் போய் நீங்க எப்ப பார்க்கப்போறீங்க?? சீக்கிரமா பாருங்க, சிறு படங்களையும் கொண்டாடுங்க.. என்றும் வெல்லும் அறம் இப்போது வென்று கொண்டிருப்பது அரணம் அ.வேளாங்கண்ணி