என் மலர்


எமகாதகன்
பஞ்சாயி என்னும் பெண் சாபத்தால் நடக்கும் மர்ம மரணங்கள் பற்றிய கதை.
கதைக்களம்
ஒரு கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சாயி என்ற பெண் விடுத்த சாபத்தால் குடும்பத்தின் மூத்த ஆண் பிள்ளைகள் திருமணம் செய்துக் கொண்டால் இறந்து விடுகிறார்கள். மேலும் பஞ்சாயியை கடவுளாகவும் ஊர் மக்கள் வழிபடுகிறார்கள். இந்த ஊரில் உள்ள மூத்த ஆண்கள் யாரும் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருகிறார்கள்.
இந்த கிராமத்தைச் சேர்ந்த நாயகன் கார்த்திக் ஸ்ரீராம், தான் காதலித்த நாயகி ராஸ்மிதாவை திருமணம் செய்துக்கொள்கிறார். சாபத்தை சட்டை செய்யாமல் திருமணம் செய்துக்கொண்டதற்கு ஊர் மக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
இதை கண்டுகொள்ளாமல் மகிழ்ச்சியாக வாழும் நாயகன் திடீரென்று ஊர் எல்லையில் இறந்து கிடக்கிறார். அவரது மரணத்திற்கு பஞ்சாயி சாபம் தான் காரணம், என்று ஊர் மக்கள் நம்பினாலும், நாயகி ராஸ்மிதா நம்ப மறுக்கிறார். மேலும் கணவரின் மரணத்தில் ஏதோ மர்மம் இருப்பதை அறிந்துக்கொள்ள முயற்சி செய்கிறார்.
இறுதியில் கணவர் கார்த்திக் ஶ்ரீராம் மரணத்தில் உள்ள மர்மத்தை ராஸ்மிதா கண்டுபிடித்தாரா? இல்லையா? எதற்காக பஞ்சாயி சாபம் உருவானது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
நாயகனாக நடித்திருக்கும் கார்த்திக் ஸ்ரீராம், நாயகியாக நடித்திருக்கும் ராஸ்மிதா, பூசாரியாக நடித்திருக்கும் தசரதன், நாயகனின் நண்பராக நடித்திருக்கும் மனோஜ் ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். அனைவரும் புதுமுகங்கள் என்பதால் நடிப்பை எதிர்பார்க்க முடியவில்லை.
இயக்கம்
குலதெய்வங்களுக்கு பின்னணியில் இருக்கும் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் கிஷன் ராஜ். சஸ்பென்ஸ் திரில்லர் பாணியில் படத்தை இயக்க முயற்சி செய்து இருக்கிறார். ஆனால் பெரியதாக எடுபடவில்லை.
இசை
விக்னேஷ் ராஜாவின் பின்னணி இசை காட்சிகளுக்கு பலம் சேர்த்திருக்கிறது.
ஒளிப்பதிவு
அதுபோல் ஒளிப்பதிவாளர் எல்.டி-யின் கேமரா அழகாக படம் பிடித்து இருக்கிறது.
தயாரிப்பு
பிரைம் ரீல்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் 'எமகாதகன்' திரைப்படத்தை தயாரித்துள்ளது.