என் மலர்


கிளாஸ்மேட்ஸ்
மதுவினால் ஒரு குடும்பம் எப்படி சீரழிகிறது என்பதை விளக்கும் படம்.
கதைக்களம்
டிராவல்ஸ் டிரைவரான அங்கையற் கண்ணனும், சரவண சக்தியும் மதுவுக்கு அடிமையாகி குடும்பத்தை கண்டு கொள்ளாமல் வாழ்ந்து வருகின்றனர். நாளை முதல் திருந்தி விடுவேன் என்று கூறி விட்டு மறுநாள் மது பாட்டிலை எடுக்கிறார்கள்.
இறுதியில் மதுவினால் இவர்களின் குடும்ப வாழ்க்கையில் என்ன ஆனது? மதுவை விட்டு திருந்தினார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தின் தயாரிப்பாளராகவும், கதாநாயகனாகவும் நடித்துள்ள அங்கையற்கண்ணன் முழுநேர குடிகாரர்களின் பிரதிபலிப்பாக அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். கணவன் எப்போதும் குடியும் கும்மாளமுமாக இருந்தாலும் அதை கண்டு கொள்ளாமல் பாசத்தை பொழிவதும் அப்பாவி மனைவியாக பிரானா நடிப்பு ரசிக்க வைக்கிறது. அபி நக்ஷத்திரா, சாம்ஸ், மயில்சாமி ஆகியோரின் நடிப்பு கதைக்கு பலம்.
இயக்கம்
குடியால் சீரழிந்த குடும்பங்களின் கதையை காட்சியாக மட்டுமல்லாமல் விழிப்புணர்வாக படத்தை இயக்கி உள்ளார் குட்டிப்புலி சரவண சக்தி. இவர் அங்கயற்கண்ணனோடு சேர்ந்து குடிப்பதும் குடித்து விட்டு பெட்ரூமில் சிறுநீர் கழிப்பதும் என கவனத்தை ஈர்த்து இருக்கிறார். எப்போதும் குடி குடி என இருப்பதால் ஒரு கட்டத்தில் சலிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடைசி 10 நிமிடம் கருத்து மட்டும் ஏற்றுக் கொள்ளும் அளவில் இருக்கிறது.
ராமநாதபுரத்தை மையமாக கொண்டு உருவான இந்த படத்தில் ஆரம்பத்தில் ராமநாதபுரத்தின் பெருமைகளை விளக்குவது சிறப்பு.
இசை
பிரித்வி இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். பின்னணி இசையில் கவனம் செலுத்தி இருக்கலாம்.
ஒளிப்பதிவு
அருண்குமார் செல்வராஜ் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
புரொடக்ஷன்
முகவை பிலிம்ஸ் நிறுவனம் ‘கிளாஸ்மேட்ஸ்’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.