என் மலர்


இங்கு மிருகங்கள் வாழும் இடம்
மகளை ஏமாற்றி அரசியல்வாதியின் மகனை பழிவாங்க துடிக்கும் தந்தையின் கதை.
கதைக்களம்
மனைவியை இழந்த பைன் ஜான் காவலாளி வேலை பார்த்து வருகிறார். தனது ஒரே மகளை கல்லூரியில் படிக்க வைத்து அளவு கடந்த பாசத்தோடு வளர்க்கிறார்.அதே ஊரில் இருக்கும் அமைச்சரின் மகனும் அவனது நண்பர்களும் இளம் பெண்களை காதலில் சிக்க வைத்து படுக்கையில் சீரழிக்கின்றனர். பைன் ஜான் மகளும் அமைச்சர் மகனின் போலி காதல் வலையில் மாட்டி அவனோடு செல்ல ஒரு பங்களாவுக்குள் அவளை அடைத்து வைத்து நண்பர்களுடன் சேர்ந்து நாசம் செய்து கொடூரமாக கொலையும் செய்கின்றான். பணம், அதிகாரத்தால் குற்றத்தில் இருந்து தப்பிக்கவும் செய்கின்றனர்.
இறுதியில் பைன் ஜான் அமைச்சர் மகனை என்ன செய்தார்? அவர்கள் தண்டிக்கப்பட்டார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
மகளையே உலகமாக நினைக்கும் பாசக்கார தந்தை கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் பைன் ஜான். மகளை பிணமாக பார்த்து கதறி துடிப்பது, குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்ததும் அவர்களுக்கு தண்டனை வாங்கி தர முடியவில்லையே என்று மகள் புகைப்படம் முன்னால் அழுவது பிறகு பழிதீர்க்க வெறியோடு புறப்படுவது என நடிப்பை வழங்கி உள்ளார்.
ஸ்ரீதேவி உன்னி கிருஷ்ணன் மகளாக துறுதுறுவென நடித்து இருக்கிறார். காமுகர்கள் பிடியில் சிக்கி சீரழிந்து என்னை மன்னித்து விடுங்கள் அப்பா என்று சொல்லி உயிர் விடும் காட்சியில் கவனிக்க வைத்து இருக்கிறார். நேர்மையான போலீஸ் அதிகாரியாக வரும் சேரன் ராஜ் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்.
இயக்கம்
நாம் இதற்கு முன் பல படங்களில் பார்த்து சலிப்பை ஏற்படுத்திய கதையை இயக்கி இருக்கிறார் இயக்குனர் எஸ்.சசிகுமார். பெண்களை ஏமாற்றும் அரசியல்வாதியின் மகன், காதலில் ஏமாறும் பெண்கள் என பல படங்கள் வந்துவிட்டது. படம் ஆரம்பம் முதல் இறுதி வரை வலுவில்லாமல் திரைக்கதை நகர்கிறது. அடுத்தடுத்து யூகிக்க முடிந்த காட்சிகள் படத்திற்கு பலவீனம்.
இசை
வித்யாஷரன் இசையில் பாடல்கள் மனதை கவரவில்லை. பின்னணி இசை சுமார் ரகம்.
ஒளிப்பதிவு
சந்திரன் சாமியின் ஒளிப்பதிவு அதிகம் எடுபடவில்லை. இன்னும் அதிக கவனம் செலுத்தி இருக்கலாம்.
தயாரிப்பு
அஜரா பேகம் இப்படத்தை தயாரித்துள்ளார்.