என் மலர்


மாடன் கொடை விழா
கோவில் நிலத்தை மீட்டு கொடை விழா நடத்த போராடும் நாயகனின் கதை.
கதைக்களம்
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சுடலை மாடன் சாமியின் கொடை விழாவின் போது, தெருக்கூத்து கலைஞரான திருநங்கை ஒருவர் மர்மமான முறையில் மரணமடைகிறார். இதை தற்கொலை வழக்காக போலீஸ் முடிக்கிறது. அதன்பிறகு ஊரில் சுடலை மாடன் சாமியின் கொடை விழா பல வருடங்களாக நடக்காமல் போக, ஊர் மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகிறார்கள்.
இந்நிலையில் கொடை விழாவை மீண்டும் நடத்த வேண்டும் என்று நாயகன் கோகுல் கவுதம் முடிவுக்கு வருகிறார். ஆனால், கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய அவரது தந்தை கோவில் இருக்கும் நிலத்தை சூரிய நாராயணன் என்பவரிடம் அடமானம் வைத்து விடுகிறார். மேலும் கொடை விழா நடத்தும் எண்ணத்தை கைவிட்டுவிட்டு, கிறிஸ்துவ மதத்திற்கு மாறும்படி மகனை கட்டாயப்படுத்துகிறார். இதை ஏற்க மறுக்கும் கோகுல் கவுதம், சூரிய நாராயணனிடம் அடகு வைத்த நிலத்தை கேட்கிறார் கோகுல் கவுதம். ஆனால், சூரிய நாராயணன் அதிக பணம் கேட்டு நிலத்தை தர மறுக்கிறார். இது பஞ்சாயத்து வரை செல்ல, சண்டையாக மாறி ஒரு கொலையும் விழுகிறது. இந்த கொலை பழி கோகுல் கவுதம். மீது விழுகிறது.
இறுதியில் கோவில் நிலத்தை மீட்டு கொடை விழாவை நாயகன் கோகுல் கவுதம் நடத்தினாரா? திருநங்கையின் மர்ம மரணத்தின் பின்னணி என்ன? நாயகன் மீது விழுந்த கொலைப்பழி என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் கோகுல் கவுதம், நடிப்பில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். இவர் உடம்பில் சாமி வந்தவுடன் ஆக்ரோஷமாக நடிப்பார் என்று எதிர்பார்த்தால், ஏமாற்றமே மிஞ்சியது. ஒரு சில இடங்களில் யதார்த்தமான நடிப்பை கொடுத்து இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ஷர்மிஷா, வாயாடி பெண்ணாக நடித்து ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். கிராமத்து பெண் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.
நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் சூப்பர் குட் சுப்பிரமணியம், அம்மாவாக நடித்திருக்கும் ஸ்ரீப்ரியா மற்றும் வில்லனாக நடித்திருக்கும் டாக்டர் சூர்ய நாராயணன் ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.
இயக்கம்
சுடலை மாடன் கொடை விழாவை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் இரா.தங்கபாண்டி. இதில் காதல், வழிபாடு முறை, மதம், திருமணம் ஆகியவற்றை பேசி இருக்கிறார். வசனங்கள் படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது. மெதுவாக செல்லும் திரைக்கதை பலவீனம்.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர் சின்ராஜ் ராம், கிராமத்து அழகை அப்படியே படம் பிடித்து இருக்கிறார்.
இசை
விபின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை படத்திற்கு ஏற்றாவாறு பயணித்து இருக்கிறது.
தயாரிப்பு
Deiva Productions நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது
குடும்பத்துடன் பார்க்க வேண்டிய அருமையான திரைப்படம்