என் மலர்


முடக்கறுத்தான்
குழந்தை கடத்தலை கண்டுபிடிக்கும் கதாநாயகன் குறித்த கதை.
கதைக்களம்
கிராமத்தில் மூலிகை வியாபாரம் செய்து வரும் நாயகன் வீரபாபு, ஆதரவற்ற குழந்தைகளை பராமரித்து வருகிறார். இவர் தன்னுடைய காதலி மஹானாவுடன் அவரது அக்காவை பார்ப்பதற்காக சென்னை வருகிறார்கள். இந்நிலையில் மஹானாவின் அக்கா குழந்தை காணாமல் போகிறது.
இதனையடுத்து காணாமல் போன குழந்தையை தேடி செல்லும் வீரபாபுவிற்கு, குழந்தை கடத்தல் பின்னணியில் மிகப்பெரிய கும்பல் இருப்பது தெரியவருகிறது. மேலும் கடத்தல் கும்பலின் தலைவன் ஆந்திராவில் இருப்பதாக அறிந்து அங்கு செல்கிறார்.
இறுதியில் ஆந்திரா சென்ற வீரபாபு, குழந்தை கடத்தல் கும்பல் தலைவனை கண்டுபிடித்தாரா? குழந்தைகளை வைத்து கடத்தல் காரர்கள் என்ன செய்கிறார்கள் என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
கதை நாயகனாக நடித்திருக்கும் சித்த மருத்துவர் வீரபாபு கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட பல நோயாளிகளை தன்னார்வத் தொண்டாக தமிழ் மருத்துவ முறையான சித்த மருத்துவத்தின் மூலம் காப்பாற்றி மாபெரும் சமூக சேவையாற்றியிருக்கிறார். ஆனால், நடிப்பில் பளிச்சிட முடியவில்லை. கொஞ்சம் நடிப்பில் கவனம் செலுத்தி நடித்து இருக்கலாம். ஆக்ஷன் காட்சிகளில் உழைத்து இருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் மஹானா படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டும் வந்து செல்கிறார். வில்லனாக நடித்திருக்கும் சூப்பர் சுப்பராயன் அதிரடி காட்டி மிரட்டுகிறார். போலீஸ் உயர் அதிகாரியாக சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் சமுத்திரக்கனியின் நடிப்பு படத்திற்கு பலம். மயில்சாமி, சாம்ஸ், காதல் சுகுமார், அம்பானி சங்கர், வெங்கல் ராவ் ஆகியோர் அங்காங்கே சிரிக்க வைத்து இருக்கிறார்.
இயக்கம்
வேலைக்கு செல்லும் பெண்கள் குழந்தைகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் எப்படி கடத்தப்படுகிறார் என்பதை மையமாக வைத்து படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் டாக்டர் வீரபாபு. படம் ஆரம்பத்திலேயே முழு கதையும் தெரிந்துவிட்டது. திரைக்கதையில் கொஞ்சம் சுவாரஸ்யம் இருந்திருந்தால் கூடுதலாக ரசித்து இருக்கலாம்.
இசை
இசையமைப்பாளர் சிற்பியின் இசையில் பாடல்கள் ஓகே ரகம். பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு கொடுத்து இருக்கிறார்.
ஒளிப்பதிவு
அருள் செல்வனின் ஒளிப்பதிவு திரைக்கதை ஓட்டத்திற்கு துணை நிற்கிறது.
படத்தொகுப்பு
ஆகாஷ் படத்தொகுப்பு ஓகே.
புரொடக்ஷன்
வயல் மூவிஸ் நிறுவனம் ‘முடக்கறுத்தான்’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.