என் மலர்


நேற்று இந்த நேரம்
காணாமல் போன நண்பர்களும் அதன் பின்னணியில் நடக்கும் மர்மமும் பற்றிய கதை.
கதைக்களம்
ஷாரிக்ஹாசனும், ஹரிதாவும் காதலித்து வருகின்றனர். அவர்கள் காதல் மூன்று ஆண்டுகள் ஆனதையொட்டி அதை கொண்டாடுவதற்காக நண்பர்களுடன் ஊட்டி செல்கின்றனர். அவர்கள் ஊட்டியில் சுற்றுலாவை மகிழ்ச்சியாக கொண்டாடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென ஷாரிக் ஹாசன் காணாமல் போகிறார். தொடர்ந்து அவருடைய நண்பரும் காணாமல் போகிறார்.
ரெண்டு பேரும் திடீரென காணாமல் போன மர்மம் என்ன? அவர்களுக்கு என்ன ஆனது? திரும்ப கிடைத்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தின் கதாநாயகன் ஷாரிக்ஹாசன் வில்லத்தனம் கலந்து கதைக்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அவருடைய நடிப்பு படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. ரொமான்ஸ் காட்சியிலும் ஆக்சன் காட்சிகளிலும் கவனத்தை ஈர்க்கிறார்.
கதாநாயகியான ஹரிதா காதலியாக ரொமான்ஸ் செய்துள்ளார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் அவரது மாறுபட்ட நடிப்பு ரசிக்க வைக்கிறது. நண்பர்களாக வரும் மோனிகா, காவியா, திவாகர் குமார், நிதின் ஆகியோர் தங்கள் கதாபாத்திரத்தை சரியாக செய்துள்ளனர். போலீஸ் விசாரணை காட்சிகளில் அவர்களது நடிப்பு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இயக்கம்
போதை மற்றும் நண்பர்கள் பிரச்சனையை ஒரு விழிப்புணர்வு பாடமாக இயக்குனர் சாய் ரோஷன் கொடுத்துள்ளார். நான்- லீனியர் திரைக்கதை பாணியில் படத்தை இயக்கி இருப்பது சிறப்பு. யாரும் எதிர்பார்த்திராத கிளைமாக்ஸ் காட்சியில் வரும் டுவிஸ்ட் ரசிக்கும் படி உள்ளது.
இசை
கெவின் இசை படத்திற்கு பலம் என்றாலும் பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.
படத்தொகுப்பு
நான்- லீனியர் பாணியில் படத்தை எடிட் செய்வது கடினம். அதை சிறப்பாக செய்து இருக்கிறார் எடிட்டர் கோவிந்த்.
ஒளிப்பதிவு
ஊட்டி பின்னணியில் அழகாக ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஷால்.
தயாரிப்பு
இந்த கால இளைஞர்களுக்கு தேவைப்படும் ஒரு படத்தை கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் நவீன் குமார்.