என் மலர்


நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்
இளம் தலைமுறையின் காதல் மற்றும் நட்பை சொல்லும் கதையாக அமைந்துள்ளது.
கதைக்களம்
கதாநாயகனான பவிஷ் ஒரு ஸ்டார் ஹோட்டலில் செஃப் ஆக வேலைப்பார்த்து வருகிறார். பவிஷ் காதல் தோல்வியினால் எப்பொழுதும் சோகமாகவே இருக்கிறார். இதனை சரி செய்வதற்காக பவிஷ் வீட்டில் திருமணத்திற்கு பெண் பார்த்து வருகின்றனர். பவிஷை திருமணத்திற்கு பெண் பார்க்க வீட்டிற்கு அழைத்து செல்கின்றனர். அங்கு பவிஷ் பார்த்த பெண் பிரியா பிரகாஷ் வாரியர். இவர்கள் இருவரும் பள்ளி பருவ நண்பர்கள் என்பது தெரியவருகிறது. இதனால் இவர்கள் இருவரும் திருமணத்திற்கு சில கால அவகாசம் கேட்கின்றனர்.
இச்சூழ்நிலையில் பவிஷின் முன்னால் காதலியான அனிகா -வின் திருமண அழைப்பிதழ் பவிஷுக்கு வருகிறது. பவிஷ் ஒரு தடுமாற்றத்துடன் இருக்க இதனை தெரிந்து கொண்ட பிரியா பிரகாஷ் வாரியர் நீ உன் பழைய காதலியுடன் ஒரு சமரசம் செய்துக் கொண்டு வா அதன் பிறகு நாம் திருமணம் செய்துக் கொள்ளலாம் என கூறுகிறார். இதற்கு அடுத்து என்ன ஆனது? அனிகாவுடனான காதல் ஏன் முறிந்தது? பவிஷ் என்ன முடிவு எடுத்தார்? யாருடன் அவர் கடைசியில் சேர்ந்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கும் பவிஷ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நடை , உடை, பாவனை என அனைத்திலும் நடிகர் தனுஷைப் பார்ப்பது போன்ற உணர்வு நமக்கு கிடைக்கிறது. கதாநாயகனின் நண்பனாக நடித்து இருக்கும் மாத்யூ தாமஸ் கொடுத்த கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார். இரண்டாம் பாதியில் வரும் நகைச்சுவை காட்சிகளில் மிரட்டியுள்ளார்.
அனிகா சுரேந்தர் மற்றும் பிரியா பிரகாஷும் எமோஷ்னல் காட்சிகளில் ஸ்கோர் செய்துள்ளனர். ரப்பியா காதூன், ரம்யா ரங்கநாதன், சித்தார்த் ஷங்கர் மற்றும் வெங்கடேஷ் மேனன் கொடுத்த கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர்.
இயக்கம்
தனுஷ் இயக்கத்தில் 3-வது திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. ஒரு ராம் காம் கதையை இயக்கியுள்ளார் தனுஷ். முதல் பாதியில் இடம் பெற்ற காதல் காட்சிகள் அட்டகாசமாக அமைந்துள்ளது. இரண்டாம் பாதியில் இருந்த திரைக்கதை வேகம் முதல் பாதியிலும் இருந்து இருந்தால் திரைப்படத்தை கூடுதலாக ரசித்து இருக்கலாம். இரண்டாம் பாதியில் உள்ள திருமண காட்சிகள் அட்டகாசமாக அமைந்துள்ளது.
ஒளிப்பதிவு
லியோன் பிரிட்டோவின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலத்தை சேர்த்துள்ளது. எல்லா காட்சிகளும் மிகவும் வைபாக, கலர்புல்லாக ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இசை
ஜி.வி பிரகாஷ் குமாரின் இசை படத்தின் இரண்டாம் பாதியில் பெரிதும் உதவி இருக்கிறது. கோல்டன் ஸ்பாரோ மற்றும் யேலே பாடல் படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளது.
தயாரிப்பு
Wunderbar Films நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.