என் மலர்


நினைவெல்லாம் நீயடா
பள்ளி பருவ காதலையும், இளமை பருவ காதலையும் உணர்த்தும் கதை.
கதைக்களம்
நாயகன் பிரஜன் பள்ளி பருவத்தில் இருந்தே மலர்விழி என்ற பெண்ணை காதலிக்கிறார். தன் காதலை சொல்லும் நாளில் இருந்து அந்த பெண் குடும்ப சூழ்நிலை காரணமாக ஊரை விட்டு செல்கிறார். அந்த பெண் நினைவிலேயே வாழ்கிறார் பிரஜன்.
இந்நிலையில் பிரஜனின் அத்தை மகள் மனிஷா யாதவ் அவர் மீது காதல் வயப்படுகிறார். வீட்டு சம்மதத்துடன் திருமணம் செய்ய ஆசைப்படுகிறார். ஆனால், பிரஜன் திருமணம் செய்ய மறுக்க, மனிஷா யாதவ் தற்கொலைக்கு முயற்சி செய்கிறார்.
ஒரு கட்டத்தில் பிரஜன், விருப்பம் இல்லாமல் மனிஷா யாதவ்வை திருமணம் செய்து கொள்கிறார். ஒரு வருடத்தில் மனிஷா யாதவ், மனநல காப்பகத்தில் இருக்கிறார்.
இறுதியில் பிரஜன் - மனிஷா யாதவ் திருமணம் என்ன ஆனது? மனிஷா யாதவ் மனநல காப்பகத்தில் இருக்க காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் பிரஜன், காதல், சோகம், ஏக்கம் என நடிப்பில் பளிச்சிடுகிறார். காதலியா, மனைவியா என திண்டாடும் இடத்தில் கவனிக்க வைத்து இருக்கிறார். நாயகியாக நடித்து இருக்கும் மனிஷா யாதவ், வெறித்தனமான காதலால் கவர்ந்து இருக்கிறார். சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார் ஶ்ரீ பிரியங்கா. ஆங்காங்கே காமெடியில் சிரிக்க வைத்து இருக்கிறார் ரெடின் கிங்ஸ்லி. பிரஜனின் பள்ளி பருவ காலத்தில் வரும் இளைஞன் சிறப்பாக நடித்து இருக்கிறார்.
இயக்கம்
காதலை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஆதி ராஜன். பல காதல் படங்கள் வெளியாகி இருந்தாலும் இப்படம் முற்றிலும் மாறுபட்டதாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர். முதல் பாதியில் பள்ளி பருவத்தையும், இரண்டாம் பாதியில் இளைஞர்கள் காதலையும் நியாபகப்படுத்தி இருக்கிறார். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார்.
இசை
இளையராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் சிறப்பு. பின்னணி இசை திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
ஒளிப்பதிவு
ராஜாவின் ஒளிப்பதிவு கலர் புல்லாக அமைந்துள்ளது.
படத்தொகுப்பு
ஆஷிஷ் ஜோசப் படத்தொகுப்பு ரசிக்கும் படி அமைந்துள்ளது.