என் மலர்


பிதா 23:23
கடத்தல் கும்பலிடம் சிக்கி இருக்கும் அக்காவை காப்பாற்றும் தம்பியின் கதை.
கதைக்களம்
நாயகி அனு கிருஷ்ணா உடல் நலம் பாதிக்கப்பட்ட தாய் மற்றும் மாற்றுத்திறனாளி தம்பி உடன் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். இதே சமயம் தொழிலதிபர் அருள்மணியை கடத்தி வைத்துக்கொண்டு அவரது மனைவியிடம் ரூ.25 கோடி பணம் பறிக்க முயற்சி செய்கிறார் ஆதேஷ் பாலா. இவரின் கூட்டாளிகளான சாம்ஸ் மற்றும் மாரீஸ் ராஜா ஆகியோர் மது போதையில் நாயகி அனு கிருஷ்ணாவையும் கடத்துகிறார்கள்.
காது கேளாத, வாய் பேச முடியாத 10 வயது சிறுவனான அனு கிருஷ்ணாவின் தம்பி, ஆபத்தில் சிக்கியிருக்கும் தனது அக்காவை காப்பாற்ற முயற்சிக்கிறார்.
இறுதியில் தன் அக்கா அனு கிருஷ்ணாவை சிறுவன் காப்பாற்றினானா? தொழில் அதிபரை கடத்திய ஆதேஷ் பாலாவிற்கு பணம் கிடைத்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆதேஷ் பாலா வில்லத்தனமான நடிப்பில் நடித்து கவனிக்க வைத்து இருக்கிறார். இவரின் கூட்டாளியாக வரும் சாம்ஸ் மற்றும் மாரீஸ் ராஜா ஆகியோர் ஆங்காங்கே சிரிக்க வைத்து இருக்கிறார்கள்.
நாயகியாக நடித்திருக்கும் அனு கிருஷ்ணாவுக்கு சிறிய வேடம் என்றாலும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். வித்தியாசமான வேடத்தில் நடித்து கவர்ந்து இருக்கிறார் ரெஹனா. மாஸ்டர் தர்ஷித், ஸ்ரீராம் சந்திரசேகர், அருள்மணி, சிவன் என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.
இயக்கம்
கடத்தல் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் எஸ்.சுகன். எளிமையான திரைக்கதையாக இருந்தாலும் அதில் அழுத்தமான காட்சிகள் இல்லாதது வருத்தம். இந்த படத்தை 23 மணி நேரம், 23 நிமிடங்களில் எடுத்திருப்பது வியப்பாக இருக்கிறது. கோவில் திருவிழா, ஒரு வீடு என எளிமையாக படத்தை எடுத்து முடித்திருப்பது சிறப்பு. திரைக்கதையில் சுவாரஸ்யம் இருந்திருந்தால் கூடுதலாக ரசித்து இருக்கலாம்.
ஒளிப்பதிவு
இளையராஜாவின் ஒளிப்பதிவு திரைக்கதைக்கு தேவையான அளவிற்கு உள்ளது.
இசை
நரேஷின் இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
தயாரிப்பு
எஸ் ஆர் பிலிம் பேக்டரி இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது.