என் மலர்


பிடி சார்
மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்களை தண்டித்து நியாயம் வாங்க முயற்சிக்கும் பிடி சாரின் கதை.
கதைக்களம்
ஈரோட்டில் பிரபல கல்வி நிறுவனத்தில் பிடி வாத்தியாராக பணிபுரிகிறார் கதாநாயகனான ஹிப்ஹாப் ஆதி. அங்கு பணி புரியும் கணக்கு வாத்தியாரான காஷ்மீராவை காதலித்து வருகிறார். பள்ளிக் கூடத்தில் துறுதுறுவென அனைத்து குழந்தைக்கும் பிடித்தமான பிடி சாராக உள்ளார் ஆதி. ஹிப்ஹாப் ஆதிக்கு சிறு வயதில் இருந்து ஒரு தோஷம் இருப்பதால் அவரது அம்மா அவரை பொத்தி பொத்தி எந்த வம்பிலும் சிக்கிக் கொள்ளாமல் வளர்க்கிறார்.
அதே கல்வி நிறுவனத்தில் பணி புரியும் மற்றொரு வாத்தியார் ஆதி வீட்டிற்கு எதிரே வசித்து வருகிறார். இவருக்கு மகளாக அனிகா சுரேந்திரன் கல்லூரி படித்து வருகிறார், கல்லூரியில் நடக்கும் கல்சுரல்ஸ் விழாவில் அனிகா மாடர்னான டிரெஸ்சை அணிந்துக் கொண்டு செல்கிறார். நிகழ்ச்சி முடித்து வரும் வழியில் சிலப்பேர் அனிகாவை கிண்டல் மற்றும் ஹாராஸ்மண்ட் செய்து, அதனை வீடியோ எடுத்து இணைய தளத்திலும் வெளியிடுகிறார்கள், இது மிகவும் வைரலாக பரவி வருகிறது. இந்த ஹாரஸ்மண்டிற்கு முழுக்க முழுக்க காரணம் இவள் மாடர்னாக டிரெஸ் அணிந்து வந்ததுதான் என அனிகா மீது பழி சுமத்துகின்றனர். இதனால் அனிகா தற்கொலை செய்துக் கொள்கிறார்.
அனிகாவின் விஷயத்தில் ஆதிக்கு ஒரு உண்மை தெரிய வருகிறது. இதனால் அனிகாவின் மரணத்திற்கு நீதி வழங்கி தர வேண்டும் என களம் இறங்குகிறார் ஆதி. விளையாட்டுத் தனமாய் இருந்த ஹிப் ஹாப் ஆதி சமூகப் பிரச்னையாய் மாறும் இந்த விஷயத்தை எப்படி டீல் செய்கிறார்? அவர் எதிர்கொள்ளும் போராட்டம், அனிகாவுக்கு நீதி கிடைத்ததா என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
பிடி வாத்தியாராக நடித்து இருக்கும் ஹிப்ஹாப் ஆதி பிடி வாத்தியார் கெட்டப்புக்கு கட்சிதமாக பொருந்தி இருக்கிறார். அவர் நடிக்கும் காட்சிகளில் கொடுக்கும் முக பாவனைகள் பெரும்பாலும் காட்சிகளுக்கு ஒரே மாதிரி தான் இருக்கிறது.ஆதி நடிப்பில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தமிழ் சினிமாவின் வழக்கமான ஹீரோயின்களாக படத்தில் ஆடலும் பாடலுக்கும் மட்டும் வளம் வருகிறார் காஷ்மீரா. படத்தின் முக்கிய கதாப்பாத்திரமான அனிகா அளவான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். தியாகராஜன் வழக்கமான வில்லனாக கதையில் வந்து செல்கிறார். பிரபு, பாக்கியராஜ், தேவதர்ஷினி, பட்டிமன்றம் ராஜா என நட்சத்திரப் பட்டாளம் இருந்தாலும், இளவரசு மட்டுமே கவனம் ஈர்க்கிறார். பாண்டியராஜன், முனீஷ்காந்த் என காமெடிக்காக நடிகர்கள் மட்டுமே படத்தில் இருக்கிறார்கள்.
இயக்கம்
பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்டோர் மீது சமூகம் நிகழ்த்தும் தாக்குதல்களையும் அடிக்கோடிட்டுக் காண்பித்துள்ளார் இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன். அன்றாடம் அனைத்து பெண்களும் சந்திக்கும் பிரச்சனையைப் பேச படக்குழுவினர் முயற்சி செய்துள்ளனர். முதல் பாதியில் காமெடிகள் மிக நன்றாக வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. இரண்டாம் பாதி திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் மிகவும் சுவாரசியமான காட்சிகளை அமைத்து இயக்கி இருக்கிறார். சொல்ல வந்த கருத்தை இன்னும் சலிப்பு தராமல், ஹீரோ காட்சிகள் என க்ளிஷே காட்சிகள் இல்லாமல் இருந்திருந்தால் இப்படம் கூடுதல் கவனம் பெற்றிருக்கும்.
இசை
ஹிப்ஹாப் ஆதியின் இசை கேட்கும் ரகம். படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் இடம்பெற்றுள்ள பின்னணி இசை பாராட்டுக்குறியது.
ஒளிப்பதிவு
மாதேஷ் மாணிக்கம் ஈரோட்டின் அழகை அழகாக பதிவு செய்துள்ளார்.
தயாரிப்பு
ஐசரி கணேஷ் சார்பாக வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்னேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
super story...i like tha film