என் மலர்


ரூபன்
காட்டில் அனாதையாக விட்டு சென்ற குழந்தையை கதாநாயகன் எடுத்து வளர்க்கிறார் அதற்கடுத்து என்ன நடந்தது என்பதே கதை.
கதைக்களம்
கதாநாயகன் விஜய் பிரசாத் வனப்பகுதியை ஒட்டியுள்ள ஒரு கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். தேன் எடுப்பதை வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வருகிறார். நாயகன் விஜய் பிரசாத் மற்றும் நாயகி காயத்ரி ரெமாவுக்கு குழந்தை இல்லாததால் ஊரில் அவர்களை இழிவு படுத்தி பேசுகின்றனர்.
இந்நிலையில் நாயகன் ஒரு நாள் காட்டுக்கு தேன் எடுக்க செல்லும் போது ஒரு பச்சிளம் குழந்தையை பார்க்கிறார். அதை எடுத்து இவர் வளர்க்கிறார். இதற்கிடையே, யானை, புலி போன்ற விலங்குகளை வேட்டையாடி அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் வில்லன் கோஷ்ட்டியினரின் குற்ற செயல்கள் பற்றி அறியும் நாயகன், அவர்களை தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறார். ஆனால், வில்லன் கோஷ்டியினர் தாங்கள் செய்யும் தவறுகளை நாயகன் மீது போட, ஊர் மக்களும் விஜய் பிரசாத் தான் இத்தகைய குற்றங்களை செய்வதாக நம்புகிறார்கள். அதற்கடுத்து என்ன நடந்தது? வில்லன் கோஷ்ட்டியினரை நாயகன் என்ன செய்தார்? என்பதே மீதிக்கதை.
நடிகர்கள்
நாயகனாக நடித்திருக்கும் விஜய் பிரசாத் சபரிமலைக்கு மாலைபோட்டு ஐயப்ப கடவுளை பிரார்த்திக்கும் இடங்களில் இயல்பாக நடித்து கவனம் ஈர்ப்பது மட்டும் இன்றி ஆக்ஷன் காட்சிகளிலும், செண்டிமெண்ட் காட்சிகளிலும் நேர்த்தியாக நடித்துள்ளார்
நாயகியாக நடித்திருக்கும் காயத்ரி ரெமா, அழுத்தமான கதாபாத்திரத்தை மிக அழகாக கையாண்டிருக்கிறார்.
சார்லி அவரின் வேலையை சிறப்பாக செய்துள்ளார். கஞ்சா கருப்பு உள்ளிட்ட மற்ற வேடங்களில் நடித்திருக்கும் நடிகர்களின் நடிப்பும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
இயக்கம்
எழுதி இயக்கியிருக்கும் ஐயப்பன், கமர்ஷியலாகவும், ஃபேண்டஸியாகவும் சொல்லியிருப்பதோடு, அதில் சிறிதளவு ஆன்மீகத்தையும் சேர்த்து சொல்லி இருக்கிறார். கம்ர்ஷியல் கதியையும் ஒழுங்காக சொல்லவில்லை, ஆன்மீக கதையையும் சரியாக சொல்ல்வில்லை மற்றும் சார்லி நடித்து இருக்கும் கதைக்களம் எதுக்கு படத்தில் இருக்கிறது என்றே தெரியவும் இல்லை.
படம் எந்த காலக்கட்டத்தில் நடக்கிறது என்பதிலும் தெளிவில்லை. ஃப்ளாஷ் பேக் போர்ஷனில் வரும் கதாப்பாத்திரம் நாயகனுக்கு நண்பனாக அதே இளமையில் நடித்து இருக்கிறார்.
எந்த கதையும் ஒழுங்காக சொல்லாததால் எந்த கதையும் மனதில் பதியவில்லை. பார்வையாளர்களிடம் சலிப்பை ஏற்படுத்துகிறது. திரைக்கதையில் இயக்குனர் ஐயப்பன் கூடுதல் கவனம் செலுத்திருக்கலாம்.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர் ராஜீவ் ராஜேந்திரனின் கேமரா பசுமையின் அழகை ரசிகர்களின் கண்களுக்கு விருந்துபடைத்திருக்கிறது.
இசை
அரவிந்த் பாபுவின் இசையில் பாடல்களும் கேட்கும் ரகம். பின்னணி இசை சில காட்சிகளுக்கு பலம் சேர்க்கிறது.
தயாரிப்பு
இப்படத்தை ஏகேஆர் ஃப்யூச்சர் ஃபில்ம்ஸ் தயாரித்துள்ளது.