என் மலர்


சபாநாயகன்
காதல் தோல்வி அடைந்த இளைஞன் குறித்த கதை.
கதைக்களம்
நாயகன் அசோக் செல்வன் குடிபோதையில் போலீசிடம் சிக்குகிறார். அதன் பிறகு ஒருவனை பிடித்து போலீஸ் விசாரிக்கும் போது, அவனது காதல் தோல்வியை கேட்டு விட்டுவிடுகிறார்கள். இதனை கேட்ட அசோக் செல்வன், நானும் காதல் தோல்வி அடைந்து இருக்கிறேன் என்று கூறுகிறார்.
பள்ளி பருவம் முதல் கல்லூரி பருவம் வரை அடுக்கடுக்கான காதல் தோல்விகளை சந்தித்து வந்ததாக போலீசிடம் அசோக் செல்வன் கதை சொல்லுகிறார். இதை கேட்ட போலீஸ் அசோக் செல்வனை விட்டார்களா? போலீசிடம் இருந்து தப்பித்தாரா? அசோக் செல்வனின் காதல்கள் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
அசோக் செல்வன் இது வரை நடித்த படங்களில் முற்றிலும் மாறுபட்ட படமாக சபாநாயகன் படம் அமைந்துள்ளது. பள்ளி பருவத்தில் மீசை தாடி இல்லாமல் டீன் ஏஜ் காதலில் அவருடைய நடிப்பு பெரும்பாலான ரசிகர்களின் மலரும் நினைவுகளை நியாபகப்படுத்துகிறது. ஆரம்பம் முதல் இறுதி வரை காதல், காதல் என பிளேபாயாக காமெடி கலந்து அசோக் செல்வன் வரும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.
காதலியாக வரும் கார்த்திகா முரளி தரன், சாந்தினி, மேகா ஆகாஷ் ஆகியோரின் ரொமான்ஸ் காட்சிகள் ரசிக்க வைப்பதுடன் நண்பர்களாக வரும் அருண், ஜெய்சீலன் ,ஸ்ரீராம் ஆகியோர் வரும் காட்சிகள் கலகலப்பூட்டுகின்றன.
போலீசாக அசோக் செல்வனிடம் கதை கேட்கும் மறைந்த நடிகர் மயில்சாமியின் அனுபவ நடிப்பு ரசிக்க வைக்கிறது. அதுபோல் போலீஸ் அதிகாரியாக வரும் மைக்கேல் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்.
இயக்கம்
பள்ளி, கல்லூரி பருவ காதலை யதார்த்தத்துடனும் காமெடி கலந்து சுவாரஸ்யத்துடன் சொல்லி இருக்கிறார் இயக்குனர் கார்த்திகேயன். காட்சிகள் ஒவ்வொன்றும் புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. ஒரு சில குறைகள் இருந்தாலும் திரைக்கதை சுவாரஸ்யமாக செல்வதால் பெரியதாக தெரியவில்லை. அலைபாயும் காட்சிகள் கை தட்டலை உருவாக்கி உள்ளது.
இசை
லியோன் ஜேம்ஸ் இசையில் பேபிமா பாடல் ஆட்டம் போட வைக்கிறது.
ஒளிப்பதிவு
பாலசுப்பிரமணியம், தினேஷ் புருஷோத்தமன், பிரபு ராகவ் ஒளிப்பதிவு கதைக்கு கூடுதல் பலம்.
படத்தொகுப்பு
கணேஷ் சிவா படத்தொகுப்பு ரசிக்க வைத்துள்ளது.
காஸ்டியூம்
நிகிதா நிரஞ்சன் கதாபாத்திரத்திற்கு ஏற்ற காஸ்டியூம் டிசைன் செய்துள்ளார்.
புரொடக்ஷன்
கேப்டன் மெகா என்டர்டெயின்மென்ட், கிளியர் வாட்டர் பிலிம்ஸ், ஐ சினிமா நிறுவனம் ‘சபாநாயகன்’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.