என் மலர்


சத்தமின்றி முத்தம் தா
தவறு செய்த கணவனிடம் இருந்து தப்பித்து காதலனுடன் தஞ்சம் அடையும் பெண்ணின் கதை.
கதைக்களம்
நாயகன் ஶ்ரீகாந்த் ஒரு நாள் இரவில் காரில் அடிப்பட்டு இருக்கும் நாயகி பிரியங்கா திம்மேஷை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதிக்கிறார். மருத்துவமனையில் பிரியங்காவை தன் மனைவி என்று கூறுகிறார் ஶ்ரீகாந்த். விபத்தில் பழைய நினைவுகளை மறக்கும் பிரியங்காவை தன் வீட்டிற்கு அழைத்து செல்கிறார்.
அங்கு பிரியங்கா கண்முன்னே இரண்டு பேரை கொலை செய்கிறார் ஶ்ரீகாந்த். அதே சமயம் பிரியங்கா விபத்து குறித்து போலீஸ் அதிகாரி ஹரிஷ் பெராடி விசாரிக்கிறார். இதில் பிரியங்காவின் கணவர் ஶ்ரீகாந்த் இல்லை என்பது தெரிய வருகிறது.
இறுதியில் ஶ்ரீகாந்த் யார்? எதற்காக பிரியங்காவை வீட்டில் அடைத்து வைத்து இருக்கிறார்? போலீஸ் அதிகாரி ஹரிஷ் பெராடி, ஶ்ரீகாந்த்தை பிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஶ்ரீகாந்த் ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கோபம், காதல் என நடிப்பில் வித்தியாசம் காண்பித்து இருக்கிறார். நாயகியாக வரும் பிரியங்கா திம்மேஷ் பாதி நேரம் குழப்பத்திலேயே இருக்கிறார்.
வில்லனாக வரும் வியான் செயற்கையான நடிப்பை கொடுத்து இருக்கிறார். கவர்ச்சியில் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார் நிஹாரிகா. போலீஸ் அதிகாரி ஹரிஷ் பெராடி அனுபவ நடிப்பு மூலம் பளிச்சிடுகிறார்.
இயக்கம்
கிரைம் திரில்லர் பாணியில் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ராஜ் தேவ். சின்ன கதையை வித்தியாசமான திரைக்கதை மூலம் சொல்ல முயற்சி செய்து இருக்கிறார் இயக்குனர். ஆனால் பெரியதாக எடுபடவில்லை. அதிக லாஜிக் மீரல்களை தவிர்த்து இருக்கலாம்.
இசை
ஜுபின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஓகே. குறிப்பாக நிஹாரிகா பாடல் இளைஞர்களை கவர்ந்து இருக்கிறது. இவரது பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம்.
ஒளிப்பதிவு
கதைக்கு தேவையான ஒளிப்பதிவை கொடுத்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் யுவராஜ்.