என் மலர்


தி டோர்
ஒரு கட்டிடத்தில் அடுத்தடுத்து நடக்கும் மர்மமான இறப்புகளை பற்றிய கதையாகும்.
கதைக்களம்
கதாநாயகியான பாவனா ஒரு ஆர்கிடெக்ட்டாக பணி புரிந்து வருகிறார். அப்போது அவர் வேலை பார்த்து வரும் ஒரு ப்ராஜக்டில் வீடு கட்டுமான பணிகளுக்காக அங்கு இருந்த ஒரு சிறிய கோவிலை இடிக்கப்படுகிறது. இந்த கோவில் இடிக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே இவரது தந்தை ஒரு விபத்தில் சிக்கி இறந்து விடுகிறார். இவரது தந்தை இறந்த பிறகு தனிமையில் இருக்கும் பாவனா சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் அதே கட்டுமான பணிகளில் ஈடுப்படுகிறார். இவர் வேலை பார்த்த அந்த கட்டிடத்தில் பல விபத்துகளும். பல இறப்புகளும் நடக்கிறது. மேலும் பாவனாவை சுற்றி சில அமானுஷ்யங்கள் மற்றும் இவருக்கு மட்டும் சில உருவங்கள் தெரிகிறது. பாவனாவை சுற்றி நடக்கும் அந்த அமானுஷ்யம் என்ன? பல இறப்புகளுக்கு காரணம் என்ன? அதில் இருந்து எப்படி பாவனா மீண்டார் என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவுக்கு ரீ எண்ட்ரி கொடுத்திருக்கும் பாவனா, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் நடித்திருக்கிறார். தன்னை சுற்றி நடக்கும் மர்ம சம்பவங்களின் முடிச்சுகளை அவிழ்ப்பதற்காக முயற்சிக்கும் பாவனாவின் நடிப்பு பாராட்டுக்குறியவை.
போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் கணேஷ் வெங்கட்ராமன் எந்தவித குறையும் இன்றி செய்திருக்கிறார்.
ஜெயப்பிரகாஷ், ஸ்ரீரஞ்சனி, நந்தகுமார், கிரிஷ், பாண்டி ரவி, சங்கீதா, சிந்தூரி, பிரியா வெங்கட், ரமேஷ் ஆறுமுகம், கபில், பைரி வினு, ரோஷினி, சித்திக், வினோலியா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதையோட்டத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறார்கள்.
இயக்கம்
எழுதி இயக்கியிருக்கும் ஜெய்தேவ், வழக்கமான பாணியிலான திகில் கதையாக ஆரம்பித்தாலும், அதில் திகில் உணர்வுகளை கதையின் ஓட்டத்தில் காணவில்லை. திகில் உணர்வே இல்லாமல் கிரைம் திரில்லர் கதைக்களத்தில் பயணிக்கிறது. திரைப்படத்தின் காட்சியமைப்பில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். பல காட்சிகள் நம் பொறுமையை சோதிக்கிறது.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர் கெளதம்.ஜி, பாவனாவை அழகாக காட்டியிருப்பதோடு, கொடைக்கானல் காட்சிகளை கவனம் ஈர்க்கும் வகையில் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
இசை
இசையமைப்பாளர் வருண் உன்னியின் பின்னணி இசை சில காட்சிகள் மூலம் திகிலடைய செய்தாலும், பல இடங்களில் அதிகப்படியான சத்தம் மூலம் காதை கிழிக்கவும் செய்திருக்கிறது.
தயாரிப்பு
நவீன் ராஜன் இப்படத்தை தயாரித்துள்ளார்.