என் மலர்


உணர்வுகள் தொடர்கதை
கணவன் மனைவி இருவருக்கும் இடையே வந்த காதலால் ஏற்படும் பிரச்சனை பற்றிய கதை.
கதை களம்
நாயகன் ரிஷிகேஷ், ஒரு பெண்ணை 2 வருடங்களாக ஒருதலையாக காதலித்து, 4 மாதங்களாக ஒரே வீட்டில் வசித்து வருகிறார். ஒரு கட்டத்தில் அந்த பெண்ணிடம் தன் காதலை சொல்லி திருமணம் செய்து கொள்ளலாம் என்று கேட்கிறார். ஆனால் அவரோ ரிஷிகேஷ் காதலை ஏற்க மறுத்து அமெரிக்கா சென்று விடுகிறார்.
காதல் தோல்வியாலும் தன் தந்தையின் கட்டாயத்தினாலும் நாயகி செர்லின் சேத்தை திருமணம் செய்து கொள்கிறார். இருவரும் திருமணத்திற்கு பிறகு ஒரே வீட்டில் தனித்தனியாக வாழ்கிறார்கள். ஒரு சமயத்தில் இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். இந்த காதலே இவர்களுக்கு பிரச்சனையாக மாறுகிறது.
இறுதியில் ரிஷிகேஷ், செர்லின் சேத் இருவருக்கும் இடையே நடந்த பிரச்சனை என்ன? எப்படி பிரச்சனையை முடித்தார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ரிஷிகேஷ், எந்தவித அலட்டல் இல்லாமல் சாதாரணமாக நடித்து இருக்கிறார். எமோஷனல் ஆன இடங்களில் கொஞ்சம் நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கலாம். நாயகியாக வரும் செர்லின் சேத்துக்கு அதிகம் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. அவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து ஓரளவிற்கு நடித்து இருக்கிறார்.
அஜய், ஆடம்ஸ் ஆகியோர் ஒரு சில இடங்களில் காமெடி செய்து சிரிக்க வைக்க முயற்சி செய்து இருக்கிறார்கள். மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.
இயக்கம்
காதலை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் பாலு சர்மா. நாயகன், நாயகி இருவருக்கும் உள்ள அதிக காட்சிகள் சுவாரஸ்யம் இல்லாமல் இருக்கிறது. திரைக்கதை வலுவில்லாமல் செல்வது படத்திற்கு பலவீனம். டைனிங் டேபிளில் மட்டும் அதிக காட்சிகள் வைத்திருப்பது சலிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இசை
ஹரி டஃபுசியா இசையில் பாடல்கள் அனைத்தும் மெலடியாக உள்ளது. பின்னணி இசை பெரியதாக எடுபடவில்லை.
ஒளிப்பதிவு
ஆர்.கௌதம், ராம் குமார், லெவின் அல்போன்ஸ், கோபி அழகர்சாமி, சாய் பிரசாத் ஆகியோர் ஒளிப்பதிவில் காட்சிகள் தெளிவாக அமைந்து இருக்கிறது.
தயாரிப்பு
உணர்வுகள் தொடர்கதை படத்தை சூப்பர் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.