என் மலர்


வருணன்
தண்ணீர் கேன் போடும் இளைஞர்களின் வாழ்க்கையில் நடக்கும் கதை.
கதைக்களம்
வடசென்னை ராயபுரம் பகுதியில் ராதாரவியும், சரண்ராஜூம் ஆளுக்கு ஒரு பகுதிகளாக பிரித்து தங்களுக்குள் பிரச்சனை எதுவும் இன்றி தண்ணீர்கேன் விற்பனை செய்து வருகிறார்கள். ராதாரவியிடம் துஷ்யந்த் ஜெயப்பிரகாசும், பிரியதர்சனும் பணிபுரிந்து வருகின்றனர். சரண்ராஜிடம் சங்கர்நாக் விஜயன் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கிடையே பிரச்சினைகளும், மோதல்களும் நடைபெறுகிறது.
இந்நிலையில் சரண்ராஜ் மனைவி மர்மமாக கொலை செய்யப்படுகிறார். இதைத் தொடர்ந்து நடக்கும் பிரச்சினைகளும் மர்மங்களும் தான் படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
தண்ணீர்கேன் நிறுவனத்தின் உரிமையாளராக ராதாரவி அனுபவ நடிப்பு படத்தின் கதைக்கு பக்கபலமாக அமைந்து உள்ளது. மற்றொரு நிறுவனத்தின் உரிமையாளராக சரண்ராஜ் ‘திக்கு வாய்’யுடன் பேசி மாறுபட்ட நடிப்பை கொடுத்து உள்ளார்.
கதாநாயகர்களாக துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், பிரியதர்சன், கதாநாயகிகளாக ஹரிப்பிரியா, கேப்ரில்லா ஆகியோரின் நடிப்பு கவனத்தை ஈர்க்கிறது.
வில்லன் கதாபாத்திரத்தில் வரும் சங்கர்நாக், போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள ஜீவாரவி மற்றும் மகேஷ்வரி, ஹைட்கார்த்தி, அர்ஜூனா கீர்த்திவாசன், கிரண்மயி ஆகியோரின் நடிப்பு கதையோடு நன்றாக பயணிக்கிறது.
இயக்கம்
தண்ணீர் கேன் விற்பனையை வைத்து சமூகத்தில் நடக்கும் யதார்த்த வாழ்வியலை இயல்பாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஜெயவேல்முருகன். ரத்தக்களரி காட்சிகள் தேவையில்லாமல் சில இடங்களில் இடம் பெற்றிருப்பது கதையின் போக்கிற்கு சிறிய சலிப்பை ஏற்படுத்துகிறது. படத்திற்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பது பின்னணியில் ஒலிக்கும் சத்யராஜின் கம்பீரகுரல்.
இசை
இசையமைப்பாளர் போபோ சசியின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்தாலும், சில இடங்களில் கொஞ்சம் ஓவராக பில்டப் கொடுத்திருக்கிறது.
ஒளிப்பதிவு
வடசென்னையை அழகாக காட்சிப்படுத்தி உள்ள ஸ்ரீராம் சந்தோஷ் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது. கட்டிட வளாகத்தில் இறுதிக் காட்சியில் நடைபெறும் சண்டைக் காட்சிகள் பிரமிப்பை ஏற்படுத்துகிறது.
தயாரிப்பு
Yakkai பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.