என் மலர்


யாவரும் வல்லவரே
பல நபர்களின் கதைகள் மற்றும் ஒரு இரவில் அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பது பற்றிய ஹைப்பர்லிங்க் திரைப்படம்.
.கதைக் களம்
கைதியாக இருக்கும் சமுத்திரக்கனி சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுதலை செய்யப்படுகிறார். வெளியே வரும் இவரை ஒரு ரவுடி கும்பல் கொலை செய்ய திட்டம் போடுகிறது. ரவுடி கும்பல் இவரை கொலை செய்ய திட்டம் போட காரணம் என்ன? எதற்காக இவர் ஜெயிலுக்கு போனார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சமுத்திரகனி, தனக்கே உரிய ஸ்டைலில் நடித்து இருக்கிறார். முதல் பாதி வசனம் ஏதும் இல்லாமல் அமைதியான நடிப்பையும், இரண்டாம் பாதியில் நியாயம் பேசும் நல்லவராக நடித்து கவனிக்க வைத்து இருக்கிறார். இவருக்கு மனைவியாக வரும் ரித்விகா கதைக்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
ரமேஷ் திலக், யோகி பாபு இருவரும் ஆங்காங்கே சிரிக்க வைத்து இருக்கிறார்கள். தேவதர்ஷினி, இளவரசு, மயில்சாமி ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.
இயக்கம்
பல நபர்களின் கதைகள் மற்றும் ஒரு இரவில் அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பது பற்றிய ஹைப்பர்லிங்க் திரைப்படமாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் ராஜேந்திர சக்ரவர்த்தி. ஹைப்பர்லிங்க் என்பதால் முதல் பாதி திரைக்கதை அங்கும் இங்குமாக நகர்கிறது.
ஒரு கதை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ஒரு மனிதனைப் பின்தொடர்கிறது. மற்றொரு கதை, கணவன் இறந்து போன ஒரு ராணுவ வீரனின் மனைவியை மையமாகக் கொண்டது. மற்றொன்று காணாமல் போன தந்தையைத் தேடும் மகனைச் சுற்றி வருகிறது. ஒரு பெண் தன் வீட்டை விட்டு ஓடத் திட்டமிடுவது, அவளைத் தடுக்க முயலும் அவளது தந்தை என பல கதைகள் ஒன்று சேர உருவாக்கி இருக்கிறார். இந்த கதைகளில் சமுத்திரகனி வரும் கதை மட்டும் அழுத்தமாக பதிகிறது. மற்ற கதைகள் திரைக்கதைக்காக மட்டுமே உதவி இருக்கிறது. படத்தில் தொழில்நுட்ப கலைஞர்களின் பெயர் போடும் விதம் சிறப்பாக அமைந்துள்ளது.
இசை
ரகுந்தனின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை ஓரளவிற்கு கைகொடுத்து இருக்கிறது.
ஒளிப்பதிவு
ஜெய்யின் ஒளிப்பதிவு சிறப்பு. அதிகம் இரவு காட்சிகள் என்பதால் அதிக உழைப்பை கொடுத்து தெளிவாக படம் பிடித்து காண்பித்துள்ளார்.
தயாரிப்பு
ஆனந்த் ஜோசப் ராஜ் இப்படத்தை தயாரித்துள்ளார்.
**