என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவிழா
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வைகாசி விசாக விழா தொடங்கியது
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வைகாசி விசாக விழா, காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
திருப்பரங்குன்றம்,
முருகனின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொண்டா டப்படும் திருவிழாக்களில் வைகாசி விசாகத்திருவிழா பிரசித்தி பெற்றது.
வைகாசி மாதம் 10 நாட்கள் கொண்டாடப்படும் இந்த திருவிழா நேற்று காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் சுப்பிரமணிய சுவாமி- தெய்வானைக்கு உற்சவர் சன்னதியில் பால், பன்னீர், சந்தனம் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று புஷ்ப அங்கி அலங்காரத்தில் உற்சவர் சன்னதியில் இருந்து புறப்பாடாவார்கள்.
மேளதாளங்கள் முழங்க கோவிலுக்குள் அமைந்துள்ள வசந்த மண்டபத்தில் இரவு8 மணிக்கு எழுந்தருளி மண்டபத்தை 3 முறை வலம் வந்து நீர் நிரப்பப்பட்ட தொட்டியில் உள்ள ஊஞ்சலில் எழுந்தருளுவார்கள். அங்கு சுவாமிக்கு சிறப்பு தீப, தூப ஆராதனைகள் நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 12-ந் தேதி வைகாசி விசாகத்தன்று, சண்முகர் சன்னதியில் உள்ள சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு பாலாபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து காலை 9 மணிக்கு கம்பத்தடி மண்டபத்தை 3 முறை வலம் வந்து விசாக குறடு மண்டபத்தில் எழுந்தருளும் சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு பக்தர்கள் கொண்டுவரும் பால்குடங்கள் மூலம் சிறப்பு பாலாபிஷேகம் நடைபெறும். இந்த பாலாபிஷேகம் அன்று காலை தொடங்கி மாலை வரை நடைபெறும்.
விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக 13 -ந் தேதி சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் சட்டத்தேரில் புறப்பாடாகி மொட்டையரசு திருவிழா நடைபெறும். விழா ஏற்பாடு களை கோவில் துணை ஆணையர் சுரேஷ் தலைமையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Next Story






