search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழகத்தில் 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு எரிவாயு குழாய்-கோவையில் அதிகாரி தகவல்
    X

    தமிழகத்தில் 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு எரிவாயு குழாய்-கோவையில் அதிகாரி தகவல்

    • கோவையில் மட்டும் 9 லட்சம் இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • கோவையில் 300 இயற்கை எரிவாயு விநியோக நிலையங்கள் ஏற்படுத்தப்படுகின்றன.

    கோவை,

    தமிழ்நாட்டில் 3 ஆயிரம் கி.மீ தூரத்திற்கு எரிவாயு குழாய் அமைக்கப்படுமென இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இயக்குநர் (குழாய் பதிப்பு பிரிவு) டி.எஸ் நானாவரே தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் குழாய் மூலம் எரிவாயு இணைப்பு வழங்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. அதில், கோவையும் ஒன்று. இங்கு கடந்த 2019-ம் ஆண்டு முதல் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 3 ஆயிரம் கிலோ மீட்டருக்கு எரிவாயு குழாய்கள் அமைக்கப்படும். உட்பகுதிகளை தவிர்க்க, எங்கெல்லாம் வாய்ப்பு உள்ளதோ அங்கெல்லாம் மாநில, தேசிய நெடுஞ்சாலைகளை ஒட்டியே எரிவாயு குழாய்கள் பதித்து வருகிறோம்.

    கோவையில் மட்டும் 9 லட்சம் இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அப்பணி 2027-ம் ஆண்டுக்குள் நிறைவு பெறும். மற்ற மாற்று எரிபொருள்களைவிட இயற்கை எரிவாயுவானது (சிஎன்ஜி) 30 சதவீதம் விலை குறைவானது. இதை பயன்படுத்துவது பாதுகாப்பானது. எனவே, கோவையில் 300 இயற்கை எரிவாயு விநியோக நிலையங்கள் ஏற்படுத்தப்படுகின்றன.

    மேலும், குழாய் மூலம் வீடுகள், கல்வி நிறுவனங்கள், ஓட்டல்கள், மருத்துவமனைகள், விடுதிகளுக்கு எரிவாயு இணைப்பு வழங்கப்படும். தற்போது நாட்டில் இயற்கை எரிவாயு பயன்பாடு 6.50 சதவீதமாக உள்ளது.

    இதை 2030-ம் ஆண்டில் 15 சதவீதமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜம்மு-காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களைத் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் குழாய் மூலம் எரிவாயு இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏனெனில், அங்குள்ள மலைப்பகுதிகளில் எரிவாயு கொண்டு செல்ல குழாய் பதிப்பது சிரமம். திரவ பெட்ரோலிய வாயுவானது (எல்பிஜி) பெரும்பாலும் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் நமது நாட்டுக்கு தேவையான இயற்கை எரிவாயு (சிஎன்ஜி) இங்கேயே போதிய அளவில் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×