என் மலர்
உள்ளூர் செய்திகள்

குன்னூர் அருகே நாவல் பழம் தேடி ஊருக்குள் புகுந்த கரடிகள் கூட்டம்
- குன்னூா் கோடேரி கிராமத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்துக்கு 5 பெரிய கரடிகள் ஒரே நேரத்தில் வந்தன.
- கரடிகளை கூண்டு வைத்துப் பிடித்து அடா்ந்த வனப்பகுதிக்குள் விடவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், குன்னூா், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் ஊடுபயிராக நாவல் பழ மரங்கள் நடவு செய்யப்பட்டு உள்ளன.
இந்த மரங்களில் தற்போது நாவல்பழம் கனிய தொடங்கி உள்ளது. எனவே நாவல் பழங்களை ருசிப்பதற்காக கரடிகள் கூட்டம், கூட்டமாக தேயிலைத் தோட்டம் மற்றும் குடியிருப்புகளுக்கு அருகே வரத்தொடங்கி உள்ளன.
இந்த நிலையில் குன்னூா் கோடேரி கிராமத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்துக்கு 5 பெரிய கரடிகள் ஒரே நேரத்தில் வந்தன. அவை அங்கு உள்ள நாவல் மரங்களில் இருந்து கீழே விழுந்து கிடந்த பழங்களை ருசித்து தின்றன.
அதன்பிறகு நீண்ட நேரம் அந்த பகுதியில் சுற்றி திரிந்தன. இதற்கிடையே கோடேரி கிராமத்தினர் தேயிலை பறிப்பதற்காக வந்தனர். அப்போது அவர்கள் தோட்டத்துக்குள் நின்ற கரடிகளை பார்த்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-கோடேரி கிராமத்தில் நாவல்ப்பழ சீசன் தொடங்கி உள்ளதால், தற்போது கரடிகள் கூட்டம், கூட்டமாக சுற்றி திரிகின்றன. அங்கு தரையில் விழுந்து கிடக்கும் நாவல் பழத்தை ருசித்து விட்டு செல்கின்றன.
இது தேயிலை தோட்ட தொழிலாளா்களை அச்சப்பட வைத்து உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன்பாக இந்தக் கரடிகளை கூண்டு வைத்துப் பிடித்து அடா்ந்த வனப்பகுதிக்குள் விடவேண்டும் என
வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.






