என் மலர்
உள்ளூர் செய்திகள்

வழக்கு சம்பந்தமாக கைது செய்ய வந்த போது கேரள சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய ரவுடி கைது
- சப்-இன்ஸ்பெக்டர் டோல்சன் மற்றும் 4 போலீசார் விஷ்ணுலாலை பிடிப்பதற்காக காந்திபுரம் வந்தனர்.
- விஷ்ணுலால் மீது கேரள மாநிலத்தில் 15 வழக்குகள் இருப்பதாக தெரிகிறது.
பீளமேடு,
கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள அம்பாளப்புழாவை சேர்ந்தவர் டோல்சன் (வயது43).
இவர் அம்பலப்புழா போலீஸ் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். அம்பலபுழா பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் சில நாட்களுக்கு முன்பு விஷ்ணுலால் ( 29) என்பவர் புகுந்து தாக்குதல் நடத்தி தகராறு செய்தார்.
மேலும் ஓட்டலில் இருந்த பொருட்களை நாசம் செய்து சூறையாடினார். இது குறித்து அம்பாலப்புழா போலீசார் வழக்குபதிவு செய்து விஷ்ணுலாலை தேடி வந்தனர்.
இந்த நிலையில் அவர் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள ஓட்டலில் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் டோல்சன் மற்றும் 4 போலீசார் விஷ்ணுலாலை பிடிப்பதற்காக காந்திபுரம் வந்தனர்.
போலீசார் வருவதை அறிந்த விஷ்ணுலால் அங்கிருந்து தப்பினார். இதையடுத்து போலீசார் அவரை அவரது செல்போன் டவர் மூலம் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர் பீளமேடு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருப்பதை அறிந்த கேரள போலீசார் அங்கு சென்றனர்.
கதவைத் தட்டி அவரை அழைத்த போது அவர் கதவை திறக்க மறுத்து விட்டார். போலீசார் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர்.
அப்போது ஆத்திரமடைந்த விஷ்ணுலால் அறையில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து சப்-இன்ஸ்பெக்டர் டோல்சன் மற்றும் இன்னொரு போலீஸ்காரரை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்றார்.
இதுகுறித்து சப் இன்ஸ்பெக்டர் டோல்சன் பீளமேடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை பீளமேடு போலீசார் கேரளா போலீசாரிடம் ஒப்படைத்தனர். விஷ்ணுலால் மீது கேரள மாநிலத்தில் 15 வழக்குகள் இருப்பதாக தெரிகிறது. பிரபல ரவுடியான இவர் கோவையில் தன்னை பிடிக்க வந்த போலீசாரை தாக்கிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






