search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமுதசுரபி கூட்டுறவு கடன் சங்க நிர்வாகி சிறையில் அடைப்பு
    X

    அமுதசுரபி கூட்டுறவு கடன் சங்க நிர்வாகி சிறையில் அடைப்பு

    • ஜெயவேல் (வயது 67). இவர் தனது உறவினர்களான தங்கபழம், பிரேம்ஆனந்த், சரண்யா ஆகியோருடன் சேர்ந்து சேலம் அழகாபுரத்தில் அமுதசுரபி சிக்கன மற்றும் கூட்டுறவு கடன் சங்கம் என்ற கூட்டுறவு வங்கியை தொடங்கினார்.
    • முதிர்வு காலம் வந்தபின் தனக்கு சேர வேண்டிய பணத்தை தரவில்லை. என்னிடம் இருந்து ரூ.2.92 லட்சத்தை மோசடி செய்துவிட்டனர் எனக் கூறியிருந்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் முனியப்பன் நகரை சேர்ந்தவர் ஜெயவேல் (வயது 67). இவர் தனது உறவினர்களான தங்கபழம், பிரேம்ஆனந்த், சரண்யா ஆகியோருடன் சேர்ந்து சேலம் அழகாபுரத்தில் அமுதசுரபி சிக்கன மற்றும் கூட்டுறவு கடன் சங்கம் என்ற கூட்டுறவு வங்கியை தொடங்கினார்.

    அதன்மூலம் சேலத்தை சேர்ந்த ஏராளமானோரிடம் அதிக வட்டி தருவதாக பணத்தை முதலீடு பெற்றனர். தொடர்ந்து, அயோத்தியாப்பட்டணம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அமுதசுரபி என்ற பெயரில் கூட்டுறவு கடன் சங்கங்களை தொடங்கி நடத்தினர். தனியாக ஏ.டி.எம். கார்டுகளை வழங்கி, அதற்கான எந்திரங்களையும் அந்தந்த கூட்டுறவு கடன் சங்க கிளைகள் முன் ஏற்படுத்தினர்.

    இந்நிலையில் சேலம் அம்மாபேட்டை தங்க செங்கோடன் தெருவை சேர்ந்த பாஸ்கரன்(52) என்பவர், சேலம் பொருளா தார குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில், அமுதசுரபி கூட்டுறவு சங்க முகவராக செயல்பட்ட குமரேசன் என்பவர் மூலம் அதிக வட்டி கிடைக்கும் என்ற ஆசையில் அவர்களது கூட்டுறவு சங்கத்தில் பணத்தை குறிப்பிட்ட காலத்திற்கு முதலீடு செய்தேன்.

    ஆனால் முதிர்வு காலம் வந்தபின் தனக்கு சேர வேண்டிய பணத்தை தரவில்லை. என்னிடம் இருந்து ரூ.2.92 லட்சத்தை மோசடி செய்துவிட்டனர் எனக் கூறியிருந்தார். இதுபற்றி பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சித்ராதேவி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது, அமுதசுரபி சிக்கன மற்றும் கூட்டுறவு கடன் சங்கம் என்பது போலியாக செயல்பட்டு வந்தது தெரியவந்தது. அந்த கூட்டுறவு கடன் சங்கத்தை ஏற்படுத்திய ஜெயவேல் உள்ளிட்ட 4 பேரும் தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் கிளைகளை ஏற்படுத்தி கோடிக்கணக்கில் மோசடி செய்திருப்பதும் தெரிந்தது.

    இதனிடையே சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தொடர்ந்து புகார்களை கொடுத்தனர். இதைதொடர்ந்து, போலி கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவராக செயல்பட்ட ஜெயவேல், இயக்குநர்களான தங்கபழம், பிரேம்ஆனந்த், சரண்யா ஆகிய 4 பேர் மீதும் மோசடி வழக்குப்பதிவு செய்தனர்.

    ஒட்டு மொத்தமாக 1000-க்கும் மேற்பட்டோரிடம் ரூ.58 கோடி அளவிற்கு மோசடி செய்திருப்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர். இன்னும் தொடர்ந்து பொதுமக்கள் புகார்களை கொடுத்து வருகின்றனர்.

    இதற்கிடையே அமுத சுரபியின் அனைத்து கூட்டுறவு சங்க அலுவல கங்களிலும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி, ஆவணங்களையும், ஏ.டி.எம் கார்டு, எந்திரங்களையும் பறிமுதல் செய்தனர். தலைமறைவான ஜெயவேல் உள்ளிட்ட 4 பேரையும் போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர்.

    இந்நிலையில் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சித்ராதேவி தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் ஜெய வேலைஅதிரடியாக கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தினர். அதில், மோசடி செய்யப்பட்ட பணத்தில் சொத்துக்கள் வாங்கி குவித்து வைத்துள்ளாரா?, வேறு எங்கும் பணமாக பதுக்கி வைத்துள்ளாரா? என்ற கோணத்தில் விசாரித்தனர்.

    பின்னர், அவரை கோவை டான்பிட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் தங்கபழம், பிரேம்ஆனந்த், சரண்யா ஆகியோரை போலீ சார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×