என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரெங்கநாதர் கோவிலை சூழ்ந்த வெள்ளநீர்.
உபரிநீர் திறப்பு அதிகரிப்பு; வடரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சூழ்ந்த வெள்ளம்
- வடரெங்கம் ரெங்கநாதர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும்.
- இக்கோயிலை 2-வது முறையாக வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே வடரங்கம் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் பழமை வாய்ந்த வடரங்கநாதர் கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயில் 2000 ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் கட்டப்பட்டு வசிஷ்ட முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது ஆகும்.
இந்த கோயில் பஞ்சரங்கத்தில் ஒரு ரங்கமாக விளங்கி வருகிறது. கடந்த 1924ம் ஆண்டு கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் கோயில் முழுவதும் மூழ்கியது
இதனையடுத்து அந்தப் பகுதி மக்கள் வடரங்கம் பகுதியிலேயே புதிய கோயிலை கட்டி அதில் வடரங்கநாதரை வைத்து தரிசனம் செய்து வந்தனர்.
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் இந்த கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாக இருந்து வருகிறது.
இந்நிலையில் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட உபரி நீரால் தற்போது கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு இருகரைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.
இதனால் கரையோரம் அமைந்துள்ள பழமை வாய்ந்த வடரங்கம் ரெங்கநாத பெருமாள் கோயிலை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. கொள்ளிடம் ஆற்றில் இதுவரை 5 முறை தண்ணீர் அதிக அளவில் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் இக்கோயிலை 2வது முறையாக தண்ணீர் சூழ்ந்துள்ளது.






