search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சாவூர்-ஹூப்ளி ரெயில் சேவையை நிரந்தரமாக்க முயற்சி; எம்.பி. பேட்டி
    X

    ரெயில் சேவை தொடங்கப்பட்டதை முன்னிட்டு பயணிகளுக்கு எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. இனிப்பு வழங்கினார்.

    தஞ்சாவூர்-ஹூப்ளி ரெயில் சேவையை நிரந்தரமாக்க முயற்சி; எம்.பி. பேட்டி

    • ஹூப்ளியிலிருந்து தஞ்சாவூருக்கு சிறப்பு ரெயில் சேவை இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
    • மன்னார்குடி-பட்டுக்கோட்டை புதிய ரெயில் தடத்துக்கு நிகழாண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர்-ஹூப்ளி இடையே விரைவு ரெயில் சேவை மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கு மட்டும் தற்காலிகமாக இயக்கும் விதமாக ஹூப்ளியில் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. இந்த ரெயில் தஞ்சாவூர் ரெயில் நிலையத்தில் ஹூப்ளி நோக்கி நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7.40 மணிக்கு புறப்பட்டது.

    அப்போது, இந்த ரெயிலில் பயணித்த பயணிகளுக்கு எஸ்.எஸ். பழனி மாணிக்கம் எம்.பி. இனிப்புகள் வழங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூரிலிருந்து மேற்கு நோக்கி பயணிக்கும் பயணிகளுக்கு போதுமான அளவுக்கு ரெயில் சேவை இல்லை என்கிற குறை இருந்து வந்தது. அதை நிவர்த்தி செய்ய வேண்டும் என ரெயில்வே வாரியத்திடம் நீண்ட காலமாக கேட்டு வருகிறோம்.

    இந்த கோடை கால நெருக்கடியைக் குறைப்பதற்காக தற்காலிக சிறப்பு சேவையாக 5 முறை தஞ்சாவூரிலிருந்து ஹூப்ளிக்கும், ஹூப்ளியிலிருந்து தஞ்சாவூருக்கும் சிறப்பு ரெயில் சேவை இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த ரயில் சேலம், பெங்களூரு வழியாக இயக்கப்படுகிறது. இதற்கு மக்களிடம் உள்ள வரவேற்பைப் பொருத்து, இச்சேவையை நிரந்தரமாக்குவதற்கு ரெயில்வே அமைச்சரை சந்தித்து முயற்சி செய்வேன்.

    தஞ்சாவூரிலிருந்து சென்னைக்கு இப்போது உழவன் விரைவு ரயில் மட்டுமே புறப்பட்டுச் செல்கிறது. வைகை, பல்லவன் போன்று சோழன் விரைவு ரயிலையும் இன்டர்சிட்டி ரெயிலாக இயக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வருகிறோம்.

    தஞ்சாவூர்-பட்டுக்கோட்டை, மன்னார்குடி-பட்டுக்கோட்டை புதிய ரெயில் தடத்துக்கு நிகழாண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நிலம் கையகப்படுத்துதலுக்கு அளவீடு செய்யப்பட்ட இடங்களில் புதிய குடியிருப்புகள் உருவாகிவிட்டன. பொதுமக்களின் கருத்தை அறிந்து புதிய தடம் போடுவதற்கு வேலை நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது, மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், திருச்சி ரயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளர் செந்தில்குமார், நிலைய மேலாளர் ஜாகீர் ஹூசைன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×