என் மலர்
உள்ளூர் செய்திகள்
விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
- அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க கூடாது.
- பட்டாசுகள் வெடிக்கும் போது மணல், தண்ணீரை வாளியில் வைத்து கொள்ள வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்ட டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றத்தின் சார்பில் விபத்தில்லா தீபாவளி கொ ண்டாடுவது எப்படி? என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தஞ்சை விளார் சாலை பர்மா காலனி தில்லை நகரில் உள்ள தூய மரியன்னை உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இதற்கு டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் வக்கீல் கோ. அன்பரசன் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் ஆரோன்ராஜ், பள்ளித்தாளாளர் லாரன்ஸ், நிர்வாக அலுவலர் டோனி சுகந்த், தீயணைப்பு மற்றும் மீட்பு துறை நிலைய அலுவலர் (போக்குவரத்து) கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாணவி ஷோபிகா வரவேற்று பேசினார்.
இதில் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சிறப்பு நிலைய அலுவலர் பொய்யாமொழி கலந்து கொண்டு பேசியதாவது:-
அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க கூடாது.
நீண்ட ஊதுபத்திகளை கொண்டு பட்டாசுகளை வெடிக்க வேண்டும். சிறுவர், சிறுமிகள் கண்டிப்பாக பெரியோர்கள் முன்னிலையில் தான் பட்டாசுகளை படிக்க வேண்டும்.
பட்டாசுகள் வெடிக்கும் போது மணல், தண்ணீரை வாளியில் வைத்துக் கொள்ள வேண்டும்.
செருப்பு அணிந்து கொண்டு வெடி வெடிக்க வேண்டும். முக்கியமாக வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுக்கக் கூடாது.
பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் ஏற்பட்டால் முதல் உதவியாக தீப்புண் மீது குளிர்ந்த தண்ணீரை ஊற்ற வேண்டும்.
பின்னர் உடனே ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
எந்த காரணம் கொண்டும் தீக்காயம் ஏற்பட்டால் பேனா மை, வாழைச்சாறு, பேஸ்ட் போன்றவற்றை தடவக்கூடாது.
தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 200 தீ விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன.
இவற்றில் 190 தீ விபத்துக்கள் அலட்சியம், கவனக் குறைவால் ஏற்பட்டது.
எனவே அலட்சியம், கவனக்குறைவு இல்லாமல் விபத்தில்லா தீபாவளியை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஜோதி ,சக்தி, ஆசிரியை காயத்ரி மற்றும் மாணவ- மாணவிகள், ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
முடிவில் ஆசிரியை சுகன்யா நன்றி கூறினார். முன்னதாக பட்டாசுகளை எப்படி வெடிக்க வேண்டும் எனவும், எப்படி வெடிக்க கூடாது எனவும் மாணவ- மாணவிகள் நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.