search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகளிருக்கான இடஒதுக்கீடு சட்டத்தை பா.ஜனதா முழு ஈடுபாட்டுடன் கொண்டு வரவில்லை- முதல்-அமைச்சர் பேச்சு
    X

    முதல்-அமைச்சருக்கு சமூக நீதிக்கான சரித்திர நாயகர் விருதை வீரமணி வழங்கினார்.

    மகளிருக்கான இடஒதுக்கீடு சட்டத்தை பா.ஜனதா முழு ஈடுபாட்டுடன் கொண்டு வரவில்லை- முதல்-அமைச்சர் பேச்சு

    • 39 மக்களவை உறுப்பினா்கள் நாடாளுமன்றத்துக்கு செல்வது, நமது உரிமையை நிலைநாட்ட செல்வதாக பொருள்.
    • காலப்போக்கில் பட்டியலின இட ஒதுக்கீட்டை காலி செய்ய போகும் ஆபத்தும் இருக்கிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் புதிய பஸ் நிலையம் அருகேயுள்ள மாநகராட்சி மாநாட்டு அரங்கத்தில் திராவிடா் கழகம் சாா்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா மற்றும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

    விழாவுக்கு திராவிடர் கழக தலைவர் வீரமணி தலைமை தாங்கினார். செயலவை தலைவர் அறிவுக்கரசு, பொருளாளர் குமரேசன், பொது செயலாளர்கள் அன்புராஜ், துரை சந்திரசேகரன், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயக்குமார், குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை தலைவர் கலி.பூங்குன்றன் வரவேற்றார்.

    விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, சமூகநீதிக்கான சரித்திர நாயகர் என்ற பட்டத்தை வீரமணி வழங்கி பாராட்டினார். தொடர்ந்து வீரமணி தொகுத்த தாய் வீட்டில் கலைஞர் என்ற நூலை முதல்-அமைச்சர் வெளியிட அதன் முதல் படியை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி பெற்று கொண்டார்.

    இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது :-

    தமிழ் மொழி, தமிழினம், தமிழ்நாட்டை காக்க, இந்தியா முழுவதும் சமதா்மம், சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதியைக் காக்க எனது வாழ்க்கையை முழுமையாக ஒப்படைத்துக் கொள்வேன் என்பதுதான் எனக்கு திராவிடா் கழகம் நடத்திய இந்த பாராட்டு விழாவில் நான் எடுத்துக் கொள்ளும் உறுதிமொழி.

    ஏதோ சாதித்துவிட்டான், நினைத்ததை முடித்து விட்டான் என்பதற்காக நடத்துகிற விழா அல்ல.

    இன்னும் நீ சாதிக்க வேண்டியது நிரம்ப இருக்கிறது. அதைச் சாதிப்பதற்கு நீ தயாராக இருக்க வேண்டும்.

    நாங்கள் பக்கபலமாக இருக்கிறோம் என்பதை சொல்லிக் கொள்வதற்காகத்தான் இந்தப் பாராட்டு விழா நடைபெற்றது.

    கூட்டாட்சி கருத்தியலை உள்ளடக்கிய இந்தியாவை அமைப்பதற்காகவே 'இந்தியா' கூட்டணியை அமைத்துள்ளோம்.

    இது அரசியல் கூட்டணி அல்ல; கொள்கை கூட்டணி. தோ்தல் வெற்றியை மட்டுமே கருத்தில் கொண்டு இதை நாங்கள் உருவாக்கவில்லை.

    அந்த வெற்றிக்குப் பின்னால் அமையப்போகும் ஆட்சியில் கோலோச்ச வேண்டிய கொள்கைகளை மனதில் வைத்தே நாங்கள் சோ்ந்துள்ளோம்.

    தமிழ்நாடு இதுவரை இழந்த அனைத்து உரிமைகளும் மீட்கப்படும். கல்வி உரிமை, நிதி உரிமை, சமூக நீதி உரிமை, மொழி உரிமை, இன உரிமை, மாநில சுயாட்சி உரிமை ஆகிய அனைத்தையும் மீட்போம்.

    தமிழ்நாட்டின் மக்கள்தொகை குறைந்துவிட்டது எனக் கூறி, மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கிற சதியை அரங்கேற்ற பாா்க்கின்றனா்.

    தமிழ்நாட்டிலிருந்து 39 மக்களவை உறுப்பினா்கள் நாடாளுமன்றத்துக்கு செல்வது, நமது உரிமையை நிலைநாட்டச் செல்வதாக பொருள்.

    இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் எனக் கூறினால், அது பொருத்தம்.

    ஆனால், குறையக் கூடாது.மக்களவை, மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கான இடஒதுக்கீட்டை 33 சதவீதமாக்க சட்டம் கொண்டு வந்தனா்.

    ஆனால், அதை பாஜக முழு ஈடுபாட்டுடன் கொண்டு வரவில்லை. மக்கள்தொகை கணக்கெடுப்பு, தொகுதி வரையறை முடிந்த பிறகு என சொல்வதே, இந்த இட ஒதுக்கீடு நிறைவேறாமல் இருப்பதற்கான தந்திரம்.

    அதிலும் குறிப்பாக, இதர பிற்படுத்தப்பட்ட மகளிா் இட ஒதுக்கீட்டை வழங்க மறுப்பது பாஜகவின் உயா் வகுப்பு மனோபாவம். காலப்போக்கில் பட்டியலின இட ஒதுக்கீட்டை காலி செய்ய போகும் ஆபத்தும் இருக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து சென்னை உயா் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அக்பா் அலி, மேற்கு வங்க முன்னாள் தலைமைச் செயலா் பாலச்சந்திரன், பாலபிரஜாபதி அடிகளாா் ஆகியோா் பாராட்டி பேசினா்.

    இந்த விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, சிவசங்கர், எம்.பி.க்கள் டி.ஆா். பாலு, எஸ்.எஸ். பழனி மாணிக்கம், கல்யாணசுந்தரம், எம்.எல்.ஏ.க்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், அன்பழகன், அசோக்குமார், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செல்வம், மகேஸ்கிருஷ்ணசாமி, மாநகராட்சி மேயா் சண். ராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, மாவட்ட பொருளாளர் எல்.ஜி.அண்ணா, மாவட்ட துணை செயலாளர் கனகவல்லி பாலாஜி, ஒன்றிய செயலாளர்கள் அருளானந்த சாமி, முரசொலி, செல்வகுமார், விளையாட்டு மேம்பாட்டு பிரிவு அமைப்பாளர் ராணி கண்ணன், ஒன்றிய குழு உறுப்பினர் ஜோதிவேல், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் தி.க. மாவட்ட தலைவர் அமர்சிங் நன்றி கூறினார்.

    Next Story
    ×