search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் தயார் நிலையில் கட்டண பிரிவு வார்டு
    X

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் தயார் நிலையில் கட்டண பிரிவு வார்டு

    • கட்டண சிகிச்சை வார்டு அமைக்க ரூ.97 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    • 26 படுக்கை வசதியுடன் கூடிய கட்டண சிகிச்சை வார்டு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    கோவை,

    கோவை அரசு மருத்துவமனைக்கு தினமும் 6,500-க்கும் மேற்பட்டவர்கள் உள்நோயாளிகளாகவும், வெளிநோயாளிகளாகவும் சிகிச்சைக்காக வருகின்றனர்.

    கோவை மட்டுமின்றி கேரளா, ஈரோடு, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களும் இங்கு சிகிச்சைக்காக வருகின்றனர்.

    இங்கு தனியார் மருத்துவனைகளுக்கு இணையான அதிநுட்பமான அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து தரப்பு மக்களையும் அரசு மருத்துவமனையின் மூலம் சிகிச்சை அளிக்கும் வகையில் தமிழக சுகாதாரத்துறை சார்பில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் தனியார் மருத்துவமனைகள் போல் நோயாளிகளிடம் கட்டணம் அடிப்படையில் சிகிச்சை அளிக்க "பே வார்டு" திட்டத்ைத ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது.

    இந்த திட்டம் ஏற்கனவே சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட சில மருத்துவமனைகளில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து, கோவை, மதுரை மற்றும் சேலம் ஆகிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் கட்டண சிகிச்சை வார்டு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    குறைந்த கட்டணத்தில் தனியார் மருத்துவமனைக்கு இணையான மருத்துவ சேவையை வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு மருத்துவ பணிகள் கழகம் சார்பில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கட்டண சிகிச்சை வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

    இதில் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் கட்டண சிகிச்சை வார்டு அமைக்க ரூ.97 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இதையடுத்து அங்கு 26 படுக்கை வசதியுடன் கூடிய கட்டண சிகிச்சை வார்டு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மருத்துவமனையின் நூற்றாண்டு விழா கட்டிடத்தின் முதல் தளத்தில் 15 படுக்கை வசதியுடனும், மகப்பேறு பிரிவில் 11 படுக்கை வசதியுடனும் வார்டு தயார் செய்யப்பட்டுள்ளது.

    இந்த வார்டில் உள்ள தனி அறையில் கழிப்பிட வசதி, இருக்கை வசதி, டி.வி. உள்ளிட்டவை தனியார் மருத்துவனைகளில் இருப்பது போன்றே இருக்கும். தவிர, இரண்டு பேர் தங்கும் வகையில் டுவின் அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த டுவின் அறையில் கழிப்பிடம் மட்டும் ஒன்றுதான் இருக்கும்.

    ஆனால் உடை மாற்றும் வசதிகள் ஆகியவை தனித்தனியாக இருக்கும். இந்த பொது சிகிச்சை வார்டில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக வார்டுகள் பிரிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் மகப்பேறு சிகிச்சைக்காக மட்டும் பிரத்யேகமாக கட்டண சிகிச்சை வார்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வார்டின் பணிகள் அனைத்தும் முடிந்தநிலையில் விரைவில் கட்டண சிகிச்சை வார்டினை தொடங்கி வைக்க உள்ளதாக மருத்துவமனையின் டீன் நிர்மலா தெரிவித்தார்.

    Next Story
    ×