search icon
என் மலர்tooltip icon

    சென்னை

    • 2022-ம் ஆண்டு சுவிட்சர்லாந்திற்கும், 2023-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கும் ஊழியர்களை அழைத்து சென்றனர்.
    • ஊழியர்களை கவுரவிக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    சமீப காலமாக நிறுவனங்களில் பல வருடங்களாக பணிபுரியும் ஊழியர்களுக்கு வெகுமதி, விலைமதிப்புள்ள பொருட்களை வழங்கும் நிகழ்வு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் முந்தைய ஆண்டிற்கான நிறுவனத்தின் நிதி இலக்குகளை அடைவதில் முக்கிய பங்கு வகித்த ஊழியர்களை ஊக்கப்படுத்தும் வகையில் 1000 ஊழியர்களை சம்பளத்துடன் கூடிய ஒரு வார பயணமாக ஸ்பெயினுக்கு அழைத்து செல்கிறது சென்னை நிறுவனம்.

    சென்னையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான காசாகிராண்ட், ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவுக்கு 1,000 ஊழியர்களை அழைத்து செல்கிறது. இது நிறுவனத்தின் "லாபம்-பங்கு பொனான்சா" திட்டத்தின் கீழ் செயல்படுத்த உள்ளது. அதாவது நிறுவனத்தின் கடந்த நிதியாண்டின் விற்பனை இலக்கை அடைவதில் முக்கிய பங்காற்றிய ஊழியர்களை கவுரவிக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இந்த திட்டத்தை காசாகிராண்ட் கடந்த 2013-ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. பல ஆண்டுகளாக, சிங்கப்பூர், தாய்லாந்து, இலங்கை, துபாய், மலேசியா மற்றும் லண்டன் உள்ளிட்ட பல சர்வதேச நாடுகளுக்கு ஊழியர்களை அந்நிறுவனம் அழைத்து சென்றுள்ளது. பெருந்தொற்று காலமான கொரோனா நேரத்திலும் காசாகிராண்ட் இந்த திட்டத்தை செயல்படுத்தியது. 2021-ம் ஆண்டு துபாய் மற்றும் அபுதாபிக்கும், 2022-ம் ஆண்டு சுவிட்சர்லாந்திற்கும், 2023-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கும் ஊழியர்களை அழைத்து சென்றனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.
    • ஒரு கிராம் வெள்ளி ரூ.101-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து விலை மளமளவென சரிந்து வந்தது. கடந்த 17-ந்தேதி வரை விலை குறைந்து காணப்பட்ட நிலையில், அன்றைய தினம் ஒரு கிராம் ரூ.6 ஆயிரத்து 935-க்கும், ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்து 480-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    அதன் தொடர்ச்சியாக கடந்த 18-ந்தேதியில் இருந்து விலை உயரத் தொடங்கியது. அன்றைய தினம் சவரனுக்கு ரூ.480-ம், அதற்கு மறுநாள் (19-ந்தேதி) சவரனுக்கு ரூ.560-ம் அதிகரித்து இருந்தது. இதனையடுத்து நேற்றும் தங்கம் விலை அதிகரித்து காணப்பட்டது.

    அதன்படி நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 65-க்கும், ஒரு சவரன் ரூ.56 ஆயிரத்து 520-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 115-க்கும், ஒரு சவரன் ரூ.56 ஆயிரத்து 920-க்கும் விற்பனை ஆனது.

    இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்தது. கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,145-க்கும் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 57,160-க்கும் விற்பனையாகிறது.

    இதனால் கடந்த 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1680 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ரஷியா-உக்ரைன் இடையே மீண்டும் போர்ப்பதற்றம் ஏற்பட்டதன் விளைவாக தங்கத்தின் மீது முதலீட்டாளர்களின் கவனம் சென்றுள்ளது. இதன் காரணமாக அதன் விலை உயரத் தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.



    வெள்ளி விலையை பொறுத்தவரையில் மாற்றம் இல்லாமல், ஒரு கிராம் ரூ.101-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    20-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,920

    19-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,520

    18-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,960

    17-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 55,480

    16-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 55,480

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    20-11-2024- ஒரு கிராம் ரூ. 101

    19-11-2024- ஒரு கிராம் ரூ. 101

    18-11-2024- ஒரு கிராம் ரூ. 99

    17-11-2024- ஒரு கிராம் ரூ. 99

    16-11-2024- ஒரு கிராம் ரூ. 99

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்பு உள்ளது.
    • தென்கிழக்கு வங்கக்கடலில் 23-ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது

    சென்னை:

    இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்பு உள்ளது.

    இதனால் தென்கிழக்கு வங்கக்கடலில் 23-ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு, புதுச்சேரி காரைக்காலில் 25-ந்தேதி கனமழையும், 26-ந்தேதி மிக கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.

    தமிழகத்தில் வரும் 26-ந்தேதி மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
    • பொன்னேரி பகுதியில் கடவூர், அரசூர், அயநல்லூர், ஆண்டவொயல்.விடத்தண்டலம், கொள்ளுமேடு.

    சென்னை:

    சென்னையில் இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    வில்லிவாக்கத்தில் சிட்கோ நகர் 1 முதல் 10 பிளாக், அம்மன்குட்டி, நேரு நகர், தெற்கு & வடக்கு ஜெகநாதன் நகர், எம்.டி.எச் சாலை, சிட்கோ தொழிற்பேட்டை, திரு நகர், அகத்தியர் நகர், பொன்விழா நகர், தெற்கு உயர்நீதிமன்ற காலனி, பாரதி நகர்.

    பொன்னேரி பகுதியில் கடவூர், அரசூர், அயநல்லூர், ஆண்டவொயல்.விடத்தண்டலம், கொள்ளுமேடு.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றி சாதனை படைத்து வருவது மக்களுக்கு புரிகிறது.
    • அரசு ஆஸ்பத்திரிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

    சென்னை:

    தி.மு.க. ஆட்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை, மக்களின் உயிர் காக்கும் துறையா? அல்லது மக்களின் உயிரைப் பறிக்கும் துறையா? என்ற சந்தேகம் எழுந்திருப்பதாக அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார். இதற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்த ஆட்சி, மருத்துவ துறையில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றி சாதனை படைத்து வருவது மக்களுக்கு புரிகிறது.

    சிலருக்கு புரிய வேண்டும் என்பதற்காக மக்கள் நல்வாழ்வுத்துறை சாதனை பட்டியலை மீண்டும் நினைவு கூர்கிறேன். மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மைக்காக்கும் 48, கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டம், இதயம் காப்போம் திட்டம், சிறுநீரகம் பாதுகாப்பு திட்டம், பாதம் பாதுகாப்போம் திட்டம், தொழிலாளர் தேடி மருத்துவம், மக்களைத்தேடி ஆய்வக திட்டம், நடப்போம் நலம் பெறுவோம் திட்டம், கண்ணொளி காப்போம் திட்டம்.

    மேலும், மருத்துவ கட்டமைப்புகள், மருத்துவ உபகரணங்கள், மருத்துவ பணி நியமனங்கள் என்று சொன்னால் பட்டியல் நீளும். மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்துக்கு ஐக்கிய நாடுகள் சபையில் பாராட்டும், விருதும் வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது உலக அளவில் உச்சபட்ச அங்கீகாரம் என்பதை எடப்பாடி பழனிசாமி அறிந்திருப்பாரா? அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட மக்கள் இன்னல்களை பட்டியலிட்டால் ஆயிரம் பக்கம் கொண்ட தனிப் புத்தகமே போடலாம்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் மருத்துவத்துறை சேவை, தரம் உயர்ந்துள்ளது என்பதற்கு மத்திய அரசு வாரி வழங்கி உள்ள விருதுகளே சாட்சி. தேசிய தர உறுதி நிர்ணய திட்ட விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு இதுவரை பெற்ற விருதுகளின் எண்ணிக்கை 614, இதில், தி.மு.க. ஆட்சியில் பொறுப்பேற்ற பிறகு பெற்ற விருதுகளின் எண்ணிக்கை 545.

    அதேபோல் மகப்பேறு துறை, கர்ப்பிணிகளுக்கான அறுவை அரங்கின் தரம் உயர்த்தும் திட்ட சான்றிதழ். இதில், தமிழகம் இதுவரை பெற்ற விருதுகளின் எண்ணிக்கை 84, தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பெற்ற விருதுகளின் எண்ணிக்கை 55. இவைதான், மக்கள் விரோத ஆட்சிக்கும், மக்கள் நலன் விரும்பும் ஆட்சிக்கும் உள்ள வேறுபாடு.

    தற்போது, அரசு ஆஸ்பத்திரிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அரசியலுக்காக ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் அரசு மருத்துவ சேவையை குறை கூறி குளிர்காய நினைக்காதீர்கள். எதிர்க்கட்சி தலைவர் என்பதை உணராமல் அரசியல் காழ்ப்புணர்ச்சியை மட்டுமே மனதில் கொண்டு அறிக்கை வெளியிடுவதன் காரணமாக எடப்பாடி பழனிசாமி, எரிச்சல்சாமியாக மக்களுக்கு காட்சியளிக்கிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ராமநாதபுரத்தில் நேற்று கனமழை கொட்டித்தீர்த்தது.
    • நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மழை பெய்தது.

    திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று ஒன்றிரண்டு இடங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக ராமநாதபுரத்தில் முகவெடிப்பு காரணமாக கனமழை கொட்டித் தீர்த்தது. பாம்பனில் அதிகபட்சமாக 28 செ.மீட்டர் மழை பெய்தது.

    இன்று காலை வரை சில இடங்களில் மழை தொடர்ந்தது. இந்த நிலையில் காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்குவாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • தமிழகத்தில் 2 நாள் சுற்றுப்பயணமாக விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை தருகிறார்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடி சிறப்புரையாற்றுகிறார்.

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கள ஆய்வு மேற் கொள்ள உள்ளார். அதன்படி அவர் ஏற்கனவே அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் கள ஆய்வை முடித்து உள்ளார்.

    இதனை தொடர்ந்து 2 நாள் சுற்றுப்பயணமாக விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை தருகிறார். இதற்காக அவர், வருகிற 28-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை சென்னையில் இருந்து விழுப்புரத்துக்கு காரில் புறப்படுகிறார். அவருக்கு மாவட்ட எல்லையான ஓங்கூர் சுங்கச்சாவடி அருகில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

    இந்த வரவேற்பை ஏற்றுக்கொள்ளும் அவர், அங்கிருந்து புறப்பட்டு திண்டிவனம் நகரில் மேம்பாலம் வழியாக ஜே.வி.எஸ். திருமண மண்டபம் வரை நடந்தே சென்று (ரோடு ஷோ) பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெறுகிறார்.

    அதன் பிறகு அந்த மண்டபத்தில் நடைபெறும் தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடி சிறப்புரையாற்றுகிறார்.

    பின்னர் திண்டிவனம் அருகே உள்ள தொழிற்பேட்டையில் தனியார் நிறுவனத்தின் கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கிறார். இந்நிகழ்வை முடித்துக்கொண்டு அங்கிருந்து தீவனூர், கூட்டேரிப்பட்டு வழியாக விழுப்புரம் வருகைதரும் அவர், கலெக்டர் அலுவலக பெருந்திட்டவளாகத்தில் உள்ள சுற்றுலா மாளிகையில் இரவு தங்குகிறார்.

    இதனை தொடர்ந்து, மறுநாள் 29-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை விழுப்புரம் அருகே ஏனாதிமங்கலத்தில் உள்ள தென்பெண்ணை யாற்றின் குறுக்கே ரூ.86 கோடியே 25 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

    அதன் பிறகு விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச்சாலை அருகில் ரூ.4 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமியின் நினைவு அரங்கம் மற்றும் இடஒதுக்கீட்டு போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிர்நீத்த 21 சமூகநீதி போராளிகளின் தியாகத்தை போற்றும் வகையில் ரூ.5 கோடியே 70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மணிமண்டபம் ஆகியவற்றை திறந்து வைத்து பார்வையிடுகிறார்.

    தொடர்ந்து, அதன் அருகில் நடைபெறும் விழாவில் பங்கேற்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு துறைகள் சார்பாக ஏழை, எளிய மக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார். இவ்விழாவை முடித்துக்கொண்டு அன்று மதியமே அவர், சென்னைக்கு புறப்பட்டுச் செல்கிறார்.

    முதலமைச்சர் வருகையையொட்டி, அவர் வருகை தரும் வழித்தடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு வசதிகள், மருத்துவ சேவை வசதி, மிக முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு வசதிகள், திறப்பு விழா செய்யப்பட உள்ள பணிகளின் திட்ட விவரங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ள பயனாளிகளின் விவரம், தமிழ்நாடு அரசின் சாதனை விவரங்கள், விழா மேடை அமைக்கும் பணிகள் உள்ளிட்டவைகளில் அந்தந்த துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 28-ந் தேதி இரவு கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள சுற்றுலா மாளிகையில் தங்க உள்ளதால், சுற்றுலா மாளிகை மட்டுமின்றி பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அரசுத்துறை அலுவலகங்களையும் சுத்தம் செய்து வர்ணம் தீட்டி புதுப்பிக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.

    • உயிரிழந்த ஆசிரியையின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவியும் அறிவித்துள்ளார்.
    • பள்ளிக் கல்வித் துறைக்கும், சக ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

    தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ரமணி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், உயிரிழந்த ஆசிரியையின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், நிதியுதவியும் அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக பட்டதாரி தமிழ் ஆசிரியையாகப் பணிபுரிந்துவந்த செல்வி ரமணி (வயது 26) த/பெ.முத்து அவர்கள் இன்று (20.11.2024) காலை பள்ளி வளாகத்தில் இருந்தபோது மதன்குமார் என்ற நபரால் கத்தியால் குத்தப்பட்டு பலத்த காயமடைந்து, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற செய்தியைக்கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

    சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக மாண்புமிகு உயர்கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்களை உயிரிழந்த ஆசிரியை அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க அனுப்பி வைத்தேன்.

    பள்ளி ஆசிரியை கொலை செய்யப்பட்டுள்ள இச்சம்பவமானது மிகவும் மிருகத்தனமானது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு அவர்மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

    இவ்வழக்கின் விசாரணை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு குற்றவாளிக்கு விரைவில் சட்டப்படி தண்டனை பெற்றுத்தரப்படும். கிராமப்புறப் பகுதியில் கல்விப்பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட செல்வி ரமணி அவர்களின் உயிரிழப்பு பள்ளிக் கல்வித் துறைக்கும், சக ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

    ரமணி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும். அவரது உறவினர்கள், சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, செல்வி ரமணி அவர்களின் குடும்பத்தினருக்கு ஐந்து இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 23ம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் 25ம் தேதியில் இருந்து மழை படிப்படியாக அதிகரிக்கும்.
    • 24, 25ம் தேதி தமிழ்நாட்டில் அதிக மழைப்பொழிவு இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

    தென் தமிழகத்தில் இன்று மிக கனமழை முதல் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    காலை முதல் தொடர்ந்து பங்வேறு இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    23ம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் 25ம் தேதியில் இருந்து மழை படிப்படியாக அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இலங்கைக்கு தெற்கு பகுதியில் காற்று சுழற்சி நிலை கொண்டுள்ளது.

    இருப்பினும் ரெட் அலர்ட் எச்சரிக்கை இன்று நள்ளிரவு வரை மட்டுமே பொருந்தும் என வானிலை ஆர்வலர் தெரிவித்துள்ளார்.

    24, 25ம் தேதி தமிழ்நாட்டில் அதிக மழைப்பொழிவு இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. ராமநாதபுரம், திருவாரூர், நாகை, காரைக்காலுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    • ஃபேரோஸ் நட்சத்திர ஓட்டலில், பாரம்பரிய கிறிஸ்துமஸ் கேக் மிக்ஸிங் விழா பிரம்மாண்டமாக நடந்தது.
    • கேக்கிற்கான கலவையை கொண்டு 70 முதல் 80 கிலோ வரையிலான கேக் தயாரிக்கப்படவுள்ளதாம்.

    உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 25ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, கிறிஸ்துமஸ் பண்டிகையை கோலாகலமாக கொண்டாட கிறிஸ்தவ மக்கள் டிசம்பர் மாத தொடக்கத்திலேயே அதற்கான ஏற்பாடுகளை செய்ய தொடங்கிவிடுவார்கள். 

    ஏசு கிறிஸ்துவின் வருகையை குறிக்கும் வகையில் வீட்டு வாசலில் நட்சத்திரங்களைத் தொங்கவிடுவது, அவரது பிறப்பைச் சித்தரிக்கும் வகையில் இல்லங்களில் கிறிஸ்துமஸ் மரங்கள் வைத்து குடில்கள் அமைப்பது, கிறிஸ்துமஸ் கேரல்ஸ் பாடுவது, கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிவது, கேக் தயாரிப்பது ஆகிய பணிகளை மேற்கொள்வார்கள்.

    அதிலும் பாரம்பரிய கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் பணியை நவம்பர் மாத பாதியிலேயே தொடங்கிவிடுவார்கள். கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பு என்பது ஒரு விழாவாகவே கொண்டாடப்படுகிறது.

    கிறிஸ்துமஸ் "கேக் மிக்ஸிங் செரிமனி" என நடக்கும் இந்த விழா, 17-ம் நூற்றாண்டின் மத்தியில் இங்கிலாந்தில் தொடங்கி, பின்னர் ஐரோப்பா முழுவதும் பரவியது. விக்டோரியா ராணி காலத்தில் அமெரிக்காவுக்கும் பரவிய இந்த கேக் தயாரிப்பு விழா, தற்போது ஆசிய நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்தியாவில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், கிறிஸ்துமஸ் கேக் மிக்ஸிங் விழாவை ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடி வருகின்றன. 

    அந்தவகையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஃபேரோஸ் நட்சத்திர ஓட்டலில், பாரம்பரிய கிறிஸ்துமஸ் கேக் மிக்ஸிங் விழா பிரம்மாண்டமாக நடந்தது.

    ஓட்டல் வாடிக்கையாளர்கள், சுற்றுலா பயணிகள், பணியாளர்கள் என அனைவரும் ஒன்றாக இணைந்து மகிழ்ச்சியாக விழாவில் பங்கேற்றனர். 

    கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்புக்காக சுமார் 50 கிலோ அளவிலான உலர் பழங்கள் மற்றும் உலர் கொட்டைகளை மதுக்கலவையில் மிக்ஸ் செய்தனர். இந்த கலவையை கொண்டு 70 முதல் 80 கிலோ வரையிலான கேக் தயாரிக்கப்படவுள்ளதாம்.

    • அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ரமணி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளது.
    • பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ரமணி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தமிழிசை சவுந்தரராஜன் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அரசு மருத்துவமனைக்குள் கத்திக்குத்து...

    அரசு பள்ளிக்குள் கத்திக்குத்து...

    நீதிமன்ற வளாகத்திற்குள் கத்திக்குத்து....

    இன்று தமிழக ஆட்சியில்

    கருத்து குத்துகளுக்கு

    உடனே நடவடிக்கை

    கத்திக்குத்துகளுக்கு இல்லை நடவடிக்கை

    இதுவே இன்றைய தமிழக அரசின்

    வாடிக்கை....

    இதை திராவிட மாடல் என்று சொல்வது வேடிக்கை.......

    சட்டம் ஒழுங்கை ஒழுங்காக பாருங்கள் என்பது.....

    மக்களின் கோரிக்கை..

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • ஆசிரியை ரமணியின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
    • தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 6 ஆயிரம் படுகொலைகளும், 50 ஆயிரம் கொள்ளைகளும் நடந்திருக்கின்றன.

    தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ரமணி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் கண்டன பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அரசு பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியர் கத்தியால் குத்தி படுகொலை: ஓசூரில் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞருக்கு வெட்டு - தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு எங்கே? முதலமைச்சர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?

    தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை ரமணியை மதன் என்பவர் வகுப்பறைக்குள் நுழைந்து சரமாரியாக கத்தியால் குத்தி படுகொலை செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கொல்லப்பட்ட ஆசிரியை ரமணியின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அதேபோல், ஓசூரில் நீதிமன்ற வளாகத்தில் கண்ணன் என்ற வழக்கறிஞர் கொடூரமான முறையில் வெட்டி சாய்க்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை கிண்டி பன்னோக்கு அரசு மருத்துவமனைக்குள் ஒருவர் நுழைந்து மருத்துவர் பாலாஜியை சரமாரியாக கத்தியால் குத்தியதால் ஏற்பட்ட அதிர்ச்சியும், பதற்றமும் விலகுவதற்கு முன்பாகவே தஞ்சாவூருக்கு அருகில் பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியர் படுகொலை செய்யப்பட்டிருப்பதையும், வழக்கறிஞர் கொடூரமான முறையில் வெட்டப்பட்டிருப்பதையும் பார்க்கும் போது நாம் எங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற அச்சம் தான் ஏற்படுகிறது.

    தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 6 ஆயிரம் படுகொலைகளும், 50 ஆயிரம் கொள்ளைகளும் நடந்திருக்கின்றன. ஆனால், காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சருக்கு இதைப்பற்றியெல்லாம் எந்தக் கவலையும் இல்லை.

    மக்களுடன் கொஞ்சமும் ஒட்டாத வகையில், தமிழ்நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதையே திரும்பத் திரும்பக் கூறிவருகிறார். மக்களிடமிருந்தும், தமிழகத்தின் அன்றாட நிகழ்வுகளில் இருந்தும் முதலமைச்சர் எவ்வளவு தூரம் விலகிச் சென்று கொண்டிருக்கிறார் என்பதற்கு இவை தான் சான்றுகள்.

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்குக் கூட முதலமைச்சர் செல்லவில்லை. காவல்துறைக்கு தெரியாமல் கள்ளச்சாராயம் எவ்வாறு விற்க முடியும்? என்று உயர்நீதிமன்றம் இன்று வினா எழுப்பியுள்ளது. நீதித்துறை, மக்கள், அரசியல் கட்சிகள் என அனைத்துத் தரப்பினராலும் கடுமையாக விமர்சிக்கப்படும் அவல நிலைக்கு காவல்துறை தள்ளப்பட்டுள்ளது.

    காவல்துறையை அதன் தலைமை இயக்குனர் தான் இயக்க வேண்டும். ஆனால், திமுக ஆட்சியில் காவல்துறைக்கு பல எஜமானர்கள் இருக்கிறார்கள். காவல்துறையின் பின்னடைவுக்கும், சட்டம் - ஒழுங்கு சீர்குலைவுக்கும் இது தான் காரணம். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இனியாவது விழித்துக் கொண்டு தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×