search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காற்றுடன் கூடிய மழையால் விழுந்த  மரத்தை அகற்றி மின்சாரம் அளிக்க வலியுறுத்தி மறியலில் ஈடுபட முயன்ற  பொது மக்கள்: கடலூரில் பரபரப்பு
    X

    மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்களிடம் கடலூர் மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    காற்றுடன் கூடிய மழையால் விழுந்த மரத்தை அகற்றி மின்சாரம் அளிக்க வலியுறுத்தி மறியலில் ஈடுபட முயன்ற பொது மக்கள்: கடலூரில் பரபரப்பு

    • கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடி கன்னிகோவில் தெருவில் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. நேற்று இரவு காற்றுடன் கூடிய மழை பெய்தது.
    • இதன் காரணமாக பள்ளம் தோண்டப்பட்ட இடத்தினருகே பெரிய அளவிலான மரம், 2 வீடுகளின் மீது விழுந்தது. இதில் மின் கம்பம் சாய்ந்து மின் கம்பிகள் அறுந்து விழுந்தது.

    கடலூர் :

    கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடி கன்னிகோவில் தெருவில் சாலை விரிவாக்க பணி, வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. நேற்று இரவு காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதன் காரணமாக பள்ளம் தோண்டப்பட்ட அருகே பெரிய அளவிலான மரம், 2 வீடுகளின் மீது விழுந்தது. இதில் மின் கம்பம் சாய்ந்து மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. இதில் வீட்டின் உரிமையாளர்களான சுப்பிரமணி, விமல் மற்றும் குடும்பத்தினர் அலறி அடித்து வெளியில் ஓடி வந்தனர். மின் கம்பிகள் அறுந்து விழுந்த நேரத்தில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் உயிர் சேதம் ஏதும் இல்லை. இதனை தொடர்ந்து இன்று காலை வீடுகள் மீது விழுந்த மரங்கள் அகற்றப்படாமல், அந்த பகுதியில் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதை சரி செய்யாமலும் இருந்ததால் அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது சம்பந்தமாக எந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்காததால் கடும் கோபம் அடைந்தனர். இதன் காரணமாக அதிகாரிகளை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக சாலையில் திரண்டனர். அப்போது தகவல் அறிந்த மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். பின்னர் அங்கிருந்த பொதுமக்களிடம் வீடுகள் மீது விழுந்த மரத்தை உடனடியாக அகற்றவும், மின்சார வசதி உடனடியாக தர வேண்டி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, தாசில்தார் விஜய் ஆனந்த் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் வீடுகள் மீது விழுந்த மரத்தை அகற்றுவதற்கும், அந்த பகுதி முழுவதும் மின்சாரம் உடனடியாக வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டனர் இந்த நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய முறையில் நஷ்ட ஈடு வழங்க நடடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்களும், பொதுமக்களும் கோரிக்கை வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    Next Story
    ×