என் மலர்
உள்ளூர் செய்திகள்

பேரிடர் மேலாண்மை பயிற்சியில் சிறந்து விளங்கிய தன்னார்வலர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
தன்னார்வலர்களுக்கு 2-ம் கட்ட பேரிடர் மேலாண்மை பயிற்சி நிறைவு
- சிறந்த அட்டவணை தயாரித்த குழுவினரை பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டது.
- பாதுகாப்பு குறித்து செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை மற்றும் தஞ்சாவூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் நடைபெற்ற அப்தமித்ரா - பேரிடர் கால நண்பன் திட்டத்தில் 2-வது கட்டமாக 33 தன்னார்வலர்களுக்கு 12 நாள் சிறப்பு பயிற்சி ரெட்கிராஸ் பேரிடர் மேலாண்மை பயிற்சி மையத்தில் கடந்த 10-ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவு அடைந்தது.
பேரிடர் மேலாண்மையில் சிறந்த பயிற்றுநர்கள் கொண்டு பேரிடர் மேலாண்மை, பேரிடர் தயார்நிலை, நிலநடுக்கம், நிலசரிவு, வெள்ளம், சுனாமி, சூறாவளி உள்ளிட்ட பல்வேறு அவசர நிலை பாதுகாப்பு குறித்து செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி வழங்கப்பட்டது.
இப்பயிற்சியில் பங்கேற்ற தன்னார்வலர்களுக்கு மாவட்ட கலெக்டர் கையொப்பமிட்ட சான்றிதழ் மற்றும் அடையாள அட்டையினை பேரிடர் தாசில்தார் ராஜேஸ்வரி முன்னிலையில் முன்னாள் ராணுவத்தினர் நல உதவி இயக்குனர் மேஜர் சரவணன் வழங்கினார். மேலும் இப்பயிற்சியில் சிறந்த தன்னார்வலராக சத்யராஜ், சிறந்த கையேடு பராமரித்த அபிராமி, சிறந்த அட்டவணை தயாரித்த கணேசன், ரூபிகா, சுருதி, பிரவீன்குமார், காயத்ரி குழுவினர், சிறந்த நாள் தொகுப்பினை தயாரித்த வசந்தகுமார், நாகதேவி மற்றும் சிறந்த செயல்முறை விளக்கம் வழங்கிய சுருதி, ரூபிகா, சௌந்தர்யா, ரம்யா, நாகதேவி, நீலகண்டன், ஹரிஹரன் குழுவினரை பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டன.
முன்னதாக பயிற்சியில் பங்கேற்ற அனைத்து தன்னார்வலர்களும் பேரிடர் மீட்பு, முதலுதவி, கயிறு முடித்தல், காயங்களுக்கு கட்டு கட்டுதல், பாதிக்கப்பட்டவர்களை சுமந்து செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு செயல்முறை விளக்கத்தினை செய்து காண்பித்தனர்.
இந்நிகழ்வில் ரெட்கிராஸ் நிதிக் குழு சேர்மன் ஜெயக்குமார், மனோரா ரெட் கிராஸ் செயலாளர் நீலகண்டன், ரெட்கிராஸ் பயிற்றுநர் சுரேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இம்முகாமிற்கான ஏற்பாடுகளை ரெட்கிராஸ் பொருளாளர் பொறியாளர் முத்துக்குமார், பயோகேர் முத்துக்குமார், பேரிடர் கட்டுப்பாட்டு மையம் மற்றும் ரெட்கிராஸ் ஊழியர்கள் செய்திருந்தனர்.
அப்தமித்ரா மூன்றாவது கட்ட பயிற்சி நாளை மறுநாள் (24-ந் தேதி) தொடங்குகிறது. இப்பயிற்சியில் பங்கேற்க விரும்பும் தஞ்சாவூர் மாவட்டத்தை சார்ந்த 18 வயது முதல் 40 வயது உட்பட்ட வர்கள் 7825044897, 9442894184 என்ற எண்களை தொடர்பு கொண்டு பதிவு செய்து பங்கேற்க லாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






