என் மலர்
உள்ளூர் செய்திகள்
சாலை விரிவாக்கப் பணிக்கு 28 வீடுகள் இடிப்பு
- பல்வேறு சிக்கல்களால் சாலை விரிவாக்கம் மெதுவாக நடந்து வருகிறது.
- 24 வீடுகளுக்கு இழப்பீடுகள் வழங்கப்பட்டு விரைந்து வீடுகளை இடித்து அகற்றும் பணி நடைபெறும்.
பொன்னேரி:
பொன்னேரியை அடுத்த புதுவாயல்-பழவேற்காடு இணைப்பு சாலை 4 வழி சாலையாக விரிவாக்கம் செய்யப்படுகிறது. ரூ.45 கோடி மதிப்பில் 4. 2 கிலோமீட்டர் தூரம் இந்த பணி நடக்கிறது. சாலை விரிவாக்கப்பணி கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட பல்வேறு சிக்கல்களால் சாலை விரிவாக்கம் மெதுவாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் சாலை விரிவாக்கத்தால் 52 வீடுகள், ஒரு கோவில் பாதிக்கப்படுவதாக நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரிய காவனம், சின்ன காவனம் பகுதி பொதுமக்கள் பல கட்ட போராட்டங்கள் நடத்தினர்.
இதற்கிடையே நெடுஞ்சாலைத்துறையினர் சாலை விரிவாக்கப்பணிக்கு எடுக்கப்படும் வீடுகளுக்கு ஏற்கனவே நோட்டீஸ் மற்றும் இழப்பீடு வழங்கி இருந்தனர். இதைத்தொடர்ந்து சின்னக்காவனம் பகுதியில் உள்ள 28 வீடுகள் பொன்னேரி உதவி கோட்ட பொறியாளர் பாலச்சந்தர் இளநிலை பொறியாளர் பரந்தாமன் முன்னிலையில் ஜே.சி.பி.எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. மீதமுள்ள 24 வீடுகளுக்கு இழப்பீடுகள் வழங்கப்பட்டு விரைந்து வீடுகளை இடித்து அகற்றும் பணி நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.