search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோகனூர் ஒன்றிய பகுதிகளில் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு
    X

    மோகனூர் அருகே மணப்பள்ளி ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுடன் பெற்றோர்களிடம் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் கலந்துரையாடிய காட்சி.

    மோகனூர் ஒன்றிய பகுதிகளில் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு

    • மோகனூர் ஊராட்சி ஒன்றியம், பாலப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • 2 குழந்தைகளுக்கு மேல் பெற்ற தாய்மார்களின் விவரங்களை ஆய்வு செய்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஊராட்சி ஒன்றியம், பாலப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது புற நோயாளிகள் தினசரி வருகை குறித்த பதிவேடு, உள் நோயாளிகள் விவர பதிவேடு, பணியாளர்களின் வருகை பதிவேடு, ஆய்வக பதிவேடு உள்ளிட்ட பதிவேடுகளை பார்வையிட்டார்.

    ஆய்வக பதிவேடுகளை பார்வையிட்டு ரத்தம், சிறுநீரில் சர்க்கரை அளவு பரிசோதனை, கொலஸ்ட்ரால், எச்.ஐ.வி நோய் தொற்று பரிசோதனை, உப்பு சத்து பரிசோதனை, கர்ப்பத்தை உறுதி செய்யும் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகளின் எண்ணிக்கையை கேட்டறிந்து ஆய்வு செய்தார்.

    கர்ப்பிணித்தாய்மார்கள் மருத்துவ ஆலோசனைக்கான வருகை பதிவேட்டினை பார்வையிட்டு, 2 குழந்தைகளுக்கு மேல் பெற்ற தாய்மார்களின் விவரங்களை ஆய்வு செய்தார். கர்ப்பிணித்தாய்மார்கள் மருத்துவ ஆலோசனைகளுக்காக குறிப்பிட்ட இடைவெளியில் வருகை புரிந்துள்ளனரா, அவர்களை கிராம சுகாதார செவிலியர்கள் சரியான முறையில் அழைத்துவந்துள்ளார்களா என்பன குறித்த விவரங்களை மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

    நோயாளிகளுடன் கலந்துரையாடி நோயின் விவரம் குறித்தும், மருந்து மாத்திரைகள் பெற்றுக்கொண்டீர்களா என்றும் கேட்டறிந்தார். சர்க்கரை, ரத்த அழுத்தம் ஆகிய நோய்களுக்காக வந்த நோயாளிகளிடம் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் உங்களுக்கு மாத்திரைகள் தொடர்ந்து வீடு தேடி வந்து வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

    பின்னர், மோகனூர் ஊராட்சி ஒன்றியம், மணப்பள்ளி ஊராட்சி, அங்கன்வாடி மையங்களில் மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுடன் கலந்துரையாடினார். மேலும், வளரிளம் பெண்களுக்கு சானிடெரி நாப்கின் வழங்கப்படும் எண்ணிக்கை குறித்தும், கர்ப்பிணித்தாய்மார்களுக்கு இணை உணவு வழங்கப்படும் விவரம் குறித்தும் கேட்டறிந்து, உணவு பொருட்களின் இருப்பு குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அதனைத்தொடர்ந்து, மணப்பள்ளி ரேசன் கடையில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் அரிசி, கோதுமை, சர்க்கரை, மண் எண்ணை, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்களின் இருப்பு குறித்து பார்வையிட்டு சரிபார்த்தார்.

    மேலும் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் மணப்பள்ளி ஊராட்சி அலுவலக புதிய கட்டடம் கட்டும் பணியினை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டார்.

    இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மருத்துவர்கள் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×