search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொடர் மழை எதிரொலி- குந்தா அணை உள்பட 3 அணைகள் நிரம்பின-தண்ணீர் திறப்பு
    X

    தொடர் மழை எதிரொலி- குந்தா அணை உள்பட 3 அணைகள் நிரம்பின-தண்ணீர் திறப்பு

    • குடிநீர் மற்றும் மின் உற்பத்திக்கு ஆதாரமாக உள்ள அணைகளுக்கு நீர் வரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது.
    • ஆறுகள், சிற்றோடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தோடுகிறது.

    மஞ்சூர்

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரிய அணையான 210 அடி உயரம் கொண்ட அப்பர் பவானியில் தற்போது 180 அடிக்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் அைண நிரம்பியுள்ளது. அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    சாண்டி நல்லா அணை தனது முழு கொள்ளளவான 49 அடியை எட்டியது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் திறக்கப்பட்டது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

    அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, போர்த்திமந்து உள்பட நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்கிறது. இதனால் ஆறுகள், சிற்றோடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தோடுகிறது.

    இதன் காரணமாக குடிநீர் மற்றும் மின் உற்பத்திக்கு ஆதாரமாக உள்ள அணைகளுக்கு நீர் வரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில் மஞ்சூர் அருகே உள்ள குந்தா அணைக்கு நீர் வரத்து பெருமளவு அதிகரித்தது.

    அணையின் நீர்மட்டம் மொத்த கொள்ளளவான 89 அடியை எட்டியது. இதை தொடர்ந்து பாதுகாப்பு கருதி மின்வாரிய உயர் அதிகாரிகள் முன்னிலையில் குந்தா அணையின் மதகுகள் திறந்து விடப்பட்டது.

    வினாடிக்கு ஆயிரம் கன அடி நீர் வரும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×